நவகிரகங்கள் ஒரே நேர்கோட்டிலிருக்கும் இந்தியாவின் பெரிய ஆலயம் திருவாரூர்!
By : Kanaga Thooriga
தியாகராஜர் திருக்கோவில் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சிவபெருமான் புற்றிடங்கொண்டார் என்றும், அன்னை கமலாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். தினசரி பூஜைகள் இங்குள்ள மரகத லிங்கத்திற்கே செய்யப்படுகின்றன. தேவாரம் பாடல் பெற்ற தலங்களும் ஒன்றாகும். இந்த கோவிலின் வளாகம் கிட்டத்தட்ட 30 ஏக்கரை உள்ளடக்கியது. இந்தியாவிலேயே மிகப்பெரிய கோவிலாகும். இங்கு 9 கோபுரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி இந்த கோவிலில் இருக்கும் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும்.
இந்த கோவில் இருக்கும் பகுதி 7 ஆம் நூற்றாண்டில் வந்த தேவாரத்தில் ஆரூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இன்றளவும் திருவாரூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருவாரூருக்கு மற்றொரு பெயரும் உண்டு அது கமலாலய ஸ்தேத்ரம் என்பதாகும். இதன் பொருள், தாமரையின் வீடு என்பது. இந்த பெயர் வருவதற்கான காரணம், இக்கோவிலில் அமைந்துள்ள கமலாலய தீர்த்த குளம் மற்றும் இங்கு குடிக்கொண்டிருக்கும் கமலாம்பிகை அம்மன்.
கமலை என்ற பெயரில் சிவபெருமானை மணக்க அன்னை இங்கு தவம் செய்ததால் கமலாலயபதி என்ற பெயரும் உண்டு. இக்கோவில் குறித்து சொல்லப்படும் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் ஏராளம். ஒன்றல்ல இரண்டல்ல. இந்த கோவிலின் அளவை பொருத்து இதனை பெரிய கோவில் என்று அழைக்கும் பழக்கம் உண்டு. இங்குள்ள சன்னதிகள், நம் ஊர்களில் தெருவோருங்களில் இருக்கும் கோவிலின் அளவை போல மிக பெரிதாகும். இந்த கோவிலை ஒருவர் முழுமையாக காண வேண்டுமெனில் ஒரு நாள் முழுவதும் ஆகும்.
இந்த கோவில் வளாகத்தில் மட்டும் கிட்டதட்ட 84 விநாயகர்கள் உள்ளனர். இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால்ல் தொலைந்த பொருட்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு முறை சதயகுப்தன் என்ற அரக்கன் அனைவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவனை சனி பிடித்தது அந்த தோஷத்திலிருந்து விடுபட நவகிரகங்கள் மீது போர் தொடுத்தான் அசுரன். தங்களை கொள்ள விளைந்த நவகிரகங்கள் தியாகராஜரை வணங்கி தங்களை காக்க வேண்டினர். தன்னை நாடி வந்தவரை காத்தருளினார் சிவபெருமான். எனவே தான் எங்குமில்லா அதிசயமாக இங்கே நவகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன.
மற்றொரு அதிசயமாக இங்கே தேவாரம் ஓதி முடிக்கும் போது ஒவ்வொரு பதிகத்தின் முடிவிலும் திருச்சிற்றம்பலம் சொல்லப்படுவதில்லை. சிதம்பரம் எனும் தில்லையிலுள்ள அய்யனே முதலில் தோன்றியவர் என்பதால் திருச்சிற்றம்பலம் சொல்லி தொடங்கி முடிப்பது வழக்கம். ஆனால் இந்த திருவாரூரில் உள்ள தியாகராஜர் தோன்றியவர் என்பதால் இங்கே தேவாரம் பாடுகையில் திருச்சிற்றம்பலம் சொல்லப்படுவதில்லை.