பொருளாதார சிக்கல் தீர பத்மபுராணம் காட்டும் லட்சுமி பூஜை. செய்வதெப்படி?
By : Kanaga Thooriga
இந்து புராணங்களில் உள்ள முக்கியமான 18 புராணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பத்ம புராணம். இதில் சிவன் பார்வதி மற்றும் விஷ்ணு மஹாலட்சுமி வழிபாடு குறித்து ஆழமாக கூறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், மிக குறிப்பாக ராஜஸ்தான் மாவட்டத்தில் புஸ்கர் எனும் பகுதியில் அமைந்துள்ள பிரம்ம தேவர் ஆலயம் குறித்து அதில் சொல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சிவபெருமான் மற்றும் மஹா விஷ்ணு வழிபாடு முறைகள், சடங்குகள் மற்றும் யோக முறை மோட்சத்திற்கான வழி என பல அம்சங்கள் குறித்தும் அந்த புராணத்தில் பேசப்பட்டுள்ளது. எனினும் இக்கட்டுரையில் மஹா இலட்சுமி வழிபாடு குறித்து சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை நாம் காணலாம். மஹாலட்சுமி தெய்வமுனி பிருகு முனிவருக்கும் கியாதி அவர்களுக்கும் பிறந்த மகளாவார். அழகு, செளபாக்கியம், செளந்தர்யம், செல்வம், வளம் என அனைத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் மஹா லட்சுமி ஆவார்.
ஒருவர் வாழ்வில் செல்வ வளம் பெற்று திகழ அவர் இலட்சுமி தேவியின் நல்லருளை பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மஹா விஷ்ணுவின் மனைவியான இவர் அய்யனின் அனைத்து அவதாரங்களிலும் அவருடன் தோன்றி இப்பூலோகத்திற்கு அருள் பாலித்துள்ளார். பத்ம புராணத்தின் படி, ஒவ்வொரு பெளர்ணமியிலும் இலட்சுமி தேவி அரச மரத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே செல்வ வளம் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் பெளர்ணமியில் அரச மரத்தை வணங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பால், வெல்லம் , நீர் ஆகியவற்றை அர்ப்பணித்து நெய் தீபமேற்றி வர அனைத்து விதமான பொருளாதார சிக்கலும் நீங்குமாம்.
மேலும் மஹா லட்சுமியின் அருளை பெறுவதற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் வாழைமரத்திற்கு கங்கா நீரை அர்பணித்து நெய் தீபமேற்றி வழிபட்டு வர சகல ஐஸ்வர்யங்களும் கூடும் என்பது நம்பிக்கை. புதன்கிழமை என்பது இலட்சுமி தேவிக்கென அர்பணிக்கப்பட்ட நாளாகும். எனவே இந்த நாளில் விரதம் இருந்து புதன் மாலை தீபமேற்றி இலட்சுமி தேவியை வணங்கி வர நல்ல பலன்கள் கிடைக்கும். தூய்மையான சிந்தனையும், தெளிந்த மனமும் இறைவனை அடைவதற்கான நேரடியான வழி, என்ற போதும் நம் புராணங்களில் சொல்லப்பட்டுள்ள மார்கங்கள் முறையான வழிபாட்டு முறையை உணர்த்துவதாகும்.