திருஷ்டிகளை நீக்கும், கஷ்டங்களை போக்கும் அனுமர் ஆலயம்! கஷ்டபஞ்சன் கோவில்
By : Kanaga Thooriga
அஹமதாபாத்திலிருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹனுமர் கோவில். இவரை கஷ்டபஞ்சன் ஹனுமன் என்றழைக்கின்றனர். இந்த கோவில் பல விநோத அம்சங்களுக்கு புகழ்பெற்றது. இங்கிருக்கும் ஹனுமர், இங்கு வந்து வணங்கும் அனைவரின் கஷ்டத்தையும் போக்குகிறார் என்பது நம்பிக்கை.
இங்கிருக்கும் முக்கிய மூலவர் ஹனுமரே. இவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நிற்பது வழக்கம். இவருடைய தரிசனம் கிடைத்தாலே தீராத நோயும் தீருமென பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் தீய சக்திகள் யார் மீதேனும் அண்டியிருந்தால் இங்கிருக்கும் ஹனுமரை தரிசித்தால் அந்த தீய சக்திகள் விலகும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்காக சனிக்கிழமைகளில் இங்கே பெரும் கூட்டம் கூடுகிறது. காரணம், அந்த நாளில் பல சிறப்பு பூஜைகள், சடங்குகள் செய்யப்படுகின்றன..
இவற்றையெல்லாம் விட இங்கிருக்கும் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், இங்கு ஹனுமரோடு சனிபகவானும் பக்தருக்கு தரிசனம் தருகிறார். ஆனால் வித்யாசமான வடிவில். இங்கிருக்கும் சனிபகவான் பெண் வடிவில் காட்சிதரும் அதிசயம் இங்கே நிகழ்கிறது.
காரணம்,ஒரு முறை எந்த காரணத்திற்காகவோ சனி பகவானின் கோபம் அதிகரித்து அவருடைய அடங்கா கோபம் காரணமாக மக்கள் அதிகம் துயருற்றனர். அவருடைய ஆக்ரோஷத்திலிருந்து தப்ப மக்கள் ஹனுமரிடம் வேண்டிய போது, அவர் மக்களின் குறையை கேட்டு, சனி பகவானை தண்டிக்க துணிந்துள்ளார். இதை அறிந்த சனி பகவான் ஹனுமாரின் கோபத்தில் இருந்து தன்னை காத்து கொள்ள வழி தேடினார். ஹனுமர் ஒரு பால பிரம்மச்சாரி என்பதை அறிந்த சனி பகவான். தான் ஒரு பெண் வடிவம் எடுத்து மன்னிப்பு கோரினால் தன்னை மன்னிப்பார் என எண்ணி பெண் வடிவு எடுத்து ஹனுமரிடம் மன்னிப்பு கோரினார்.
அதன்படியே அவரை மன்னித்து மக்களை காத்தார் ஹனுமார். எனவே இந்த ஸ்தலத்தில் சனி பகவான் பெண் வடிவில் காட்சி தருகிறார். எனவே மக்களின் கஷ்டங்களை தீர்க்கும் திருத்தலமாக இது இருப்பதால், இந்த கோவிலுக்கு கஷ்டபஞ்சன் ஹனுமான் கோவில் என்று பெயர்.
மேலும் இந்த கோவிலில் வழிபடுவதால் ஒருவருக்கு உள்ள குண்டலினி தோஷம் நீங்கி அனைத்துவிதமான திருஷ்டிகளும் விலகி ஒருவருக்கு நல்ல காலம் துவங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மிக பிரமாண்டமான வளாகத்தில் இக்கோவில் அமைந்திருப்பது இதன் அழகை கூட்டுவதாக உள்ளது. ன