Kathir News
Begin typing your search above and press return to search.

சூடிக்கொடுத்த சுடர் கொடி என ஆண்டாள் அழைக்கப்படுவது ஏன்?

சூடிக்கொடுத்த சுடர் கொடி என ஆண்டாள் அழைக்கப்படுவது ஏன்?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  20 March 2022 2:23 AM GMT

ஶ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தமிழகத்தின் தலைச்சிறந்த, புகழ்மிக்க கோவில்களுள் ஒன்று. விஷ்ணு திருத்தலங்களில் புகழ்மிக்க 108 திவ்யதேசங்களுள் ஒன்று. தமிழக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகவும் இக்கோவில் கோபுரம் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆடிமாதத்தில் நடைபெறும் பூரம் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். காரணம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்தார் என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. மஹாலக்‌ஷிமியின் மறு உருவமாக கருதப்படுபவர் ஆண்டாள்.

பன்னிரண்டு ஆழ்வார்களுள் பெண் ஆழ்வாராக இருப்பவர் ஆண்டாள் மட்டுமே. இந்த ஶ்ரீ வில்லிப்புத்தூர் கோவிலினுள் இரண்டு ஆலயங்கள் உண்டு. ஒன்று மஹா விஷ்ணுவிற்கானது. இங்கே விஷ்ணு பெருமான், வடபத்ரசாயி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். வட பத்ர என்றால் ஆல மரத்தின் இலை என்று பொருள். பெருவெள்ளத்தின் போது கடவுள் தெய்வ வடிவத்தில் வடபத்ரம் என்று அழைக்கப்படும் ஆலமர இலையில் ஓய்ந்திருக்கிறார்.

இதற்கு அடுத்து அமைந்துள்ளது ஆண்டாள் கோவில். இரு கோவிலுக்கும் இடையே அமைந்துள்ளது நந்தவனம் இங்கு தான் பெரியாழ்வாரால் ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டார் என்பது நம்பிக்கை. இந்த கோவிலுனுள் ஒரு கிணறு உண்டு, இங்கு தான் இறைவனுக்கான மாலையை தான் சூட்டிக்கொண்டு தன்னுடைய பரதிபிம்பத்தை அந்த கிணற்றின் நீரில் கண்டார் ஆண்டாள். அதனாலேயே அவர் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கபட்டார்.

இக்கோவிலின் மற்றொரு தனித்துவ அம்சம் என்னவெனில், மார்கழி மாதத்தில் 61 மூலிகைகளை கொண்டு 40 நாட்களுக்கு தைலம் ஒன்று காய்ச்சப்படுகிறது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் போன்ற பொருட்கள் சேர்த்து, ஏழுபடி எண்ணெய் விட்டு, இரண்டு பேர் சேர்ந்து 40 நாட்கள் காய்ச்சுவர்.. இது நாலுபடி தைலமாக மாறும். இந்த தைலமே, மார்கழி மாதத்தின் எண்ணெய்காப்பு உற்சவத்தின் போது எட்டு நாட்கள் ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது. உற்சவத்திற்கு பின்னர், பக்தர்களுக்கு தைலப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இது தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை.

அனைத்தையும் தாண்டி தமிழ் மொழிக்கு ஆண்டாள் வழங்கியிருக்கும் பங்களிப்பு அளப்பரியாதது. அவர் வழங்கிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் இன்றும் மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் பெரும்பாலான வீடுகளில் ஒலிக்க கேட்கலாம்.

மதுரையிலிருந்து 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News