முத்தான முக்திநிலையை பெறுவதற்கு துணை புரியும் வைகுண்டா ஏகாதசி!
By : Kanaga Thooriga
வருடா வருடம் கொண்டாடப்படும் பண்டிகைகளை ஒத்தே, மாத மாத பல முக்கிய விரதங்கள், வழிபாடுகள் பண்டிகைகள் இந்துக்களால் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக அமாவாசை, பவுர்ணமி, ஏகாதேசி, சஷ்டி, சதுர்த்தி ஆகியவைகளின் வரிசையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏகாதசி. இந்த ஏகாதசியன்று விரதமிருந்து இறைவனை வழிபடுவதால் ஒருவர் செய்த பாவங்களிலிருந்து விடுதலை கிடைப்பதாக நம்பப்படுகிறது.
அந்த வகையில் ஒருவர் மாதம் தோரும் ஏகாதசியில் விரதமிருந்து பெரும் பலனை, இந்த மார்கழி மாதத்தின் வைகுண்டா ஏகாதசியை பின்பற்றுவதால் பெற முடியும் என ஆன்மீக அறிஞர்கள் சொல்கின்றனர். இத்துனை சிறப்பு வாய்ந்த வைகுண்டா ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வளர்பிறையில் பதினோராம் நாள் வருகிறது.
இந்த நாள் குறித்து பல்வேறு விதமான சிறப்புகள் நம் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. விஷ்ணு பரமாத்மா தனது எதிரிகளாக இருந்த இரண்டு அரக்கர்களை அழித்த பின் அவர்களுக்கான முக்தி இந்த நாளில்தான் கிடைக்கப்பெற்றுது. இந்நாளில் தான் வைகுண்டத்தின் கதவுகள் அவர்களுக்காக திறந்தது, என வரலாறு சொல்கிறது. அவ்வாறு அவர்களுக்காக கதவு திறக்கப்பட்ட பொழுது தாங்கள் பெற்ற இந்த முக்திநிலை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அவர்கள் வரம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
எனவே பெருமாளை இந்த திருநாளில் வணங்கி உண்ணாநோன்பிருந்து அதிகாலை எழுந்து திருமாலை சொர்க்க வாயில் வழியே வழிபட்டால் தாங்கள் செய்த பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கப் பெறுவதாக உணர்கிறார்கள். பெருமாள் கோவில்களில் இருக்கும் வடக்கு வாசல் எப்பொழுதுமே மூடப்பட்டு இருப்பதை நாம் காணமுடியும். இந்த வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசியின் போது மட்டுமே திறக்கப்படும். திருப்பதி பெருமாள் கோவிலில் இருக்கிற வடக்கு வாயிலை "வைகுண்ட துவாரம் " என அழைக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதேசி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்கள் பகல்பத்து என்றும் பிந்தைய பத்து நாட்கள் இராப்பத்து என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் திருமால் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனத்தில் கோவிலை சுற்றி உலா வருகிறார். வைகுண்ட ஏகாதசி நாளன்று ரத்தினங்களால் செய்யப்பட்ட ரத்னாங்கி எனும் ஆடையை அணிந்தவாறு கருவறையில் இருந்து வெளிப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் வடக்கு வாயில் வழியாக உலா வருவார். இதனை காண கண் கோடி வேண்டும்.