Kathir News
Begin typing your search above and press return to search.

இருதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுதலையளிக்கும் இருதயாலீஸ்வரர் ஆலயம்

இருதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுதலையளிக்கும் இருதயாலீஸ்வரர் ஆலயம்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  5 Jun 2022 2:31 AM GMT

சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது இருதயாலீஸ்வரர் ஆலயம். இந்த கோவிலின் தனிச்சிறப்பு யாதெனில் இக்கோவிலின் கருவறையில் மூலவருக்கு அருகே நாயன்மார்களுள் ஒருவரான பூசலாரின் திருவுருவத்தையும் தரிசிக்க முடியும் என்பதே.

யாரிந்த பூசலார்? ஏன் இக்கோவிலின் மூலவருக்கு இருதயாலீஸ்வரர் என்ற பெயர் என்பதற்கு ஒரு புராணக்கதை உண்டு. நாயன்மார்களுள் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் அவதரித்தவர். எப்போதும் திருநீற்றை உடலெங்கும் பூசியிருந்ததால் இவருக்கு பூசலார் என்ற பெயர் உருவானது. பரம ஏழையான இவர் தீவிரமான சிவபக்தர். இவர் வசித்த இடத்தின் அருகேயிருந்த சிவலிங்கத்தை அனுதினமும் பூஜித்து வந்தார். இவருக்கு சிவனுக்கு சிவாலயம் எழுப்ப வேண்டும் என்பது பெரும் கனவு. ஆனால் அதற்கு போதுமான வசதியில்லை. எனவே ஒரு வித்தியாசமான முடிவினை செய்தார். மனம் என்பது மாயக்கருவி. எனவே நிஜத்தில் தான் தம்மால் கோவில் கட்ட இயலாதே தவிர மனதில் கட்ட முடியும் என்று முடிவு செய்து. தன்னுடைய மனக்கண்ணில் கோவில் கட்ட தொடங்கினார்.

மனதில் தானே கட்டுகிறோம் என்பதற்காக அவர் அதை ஒரே நாளில் கற்பனை செய்துவிடவில்லை. கற்பனை தான் என்றால் தீவிர பக்தியுடன் சிரத்தையுடன், நிஜக்கோவில் கட்ட எவ்வளவு நாள் பிடிக்குமோ அதே சிரத்தையுடன் மனதிலும் ஆலயம் எழுப்பினார். அவருடைய கோவில் பணி நிறைவு கட்டத்தை நெருங்கியது. அவர் உருவாக்கிய மனக்கோவிலுக்கு கும்பாபிஷேக நாள் குறித்திருந்தார். எதிர்பாரா விதமாக காஞ்சியின் மன்னன் ராஜசிம்ம பல்லவரும் அவர் ஊரில் ஒரு சிவாலயம் ஒன்றை கட்டியிருந்தார். அந்த கோவிலுக்கு அவர் குறித்திருந்த கும்பாபிஷேக தேதியும், பூசலாரின் தேதியும் ஒன்றாக இருந்தது.

காஞ்சி மாநகரமே கும்பாபிஷேகத்தை ஒட்டி திருவிழா கோலம் பூண்டிருந்தது. மன்னரும் அந்த விழா நாளுக்கு தயாராக் வந்த வேளையில் கும்பாபிஷேக நாளின் முந்தைய நாள் மன்னருக்கு ஒரு கனவு வந்தது. அவர் கனவில் தோன்றிய இறைவன், "மன்னா, நீ கும்பாபிஷேக தேதி குறித்திருக்கும் அதே நாளில் திருநின்றவூரில் பூசலாரும் குறித்திருக்கிறார். நான் அங்கு செல்லயிருக்கிறேன். நீ மற்றொரு நாள் வைத்து கொள் " எனக்கூறி மறைந்தார்.

இறைவன் தன் கோயிலை விடுத்து மற்றொரு கோவிலுக்கு அருள்பாலிக்க செல்கிறார் எனில் அந்த கோவில் எப்படியிருக்கும் எங்கிருக்கும் என தேடி திருநின்றவூரில் பூசலாரை கண்டடைந்தான் மன்னன். கும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் சிவாலயம் எங்கே ? என மன்னன் கேட்ட போது, தன் மனதினுள் தான் அந்த ஆலயம் உள்ளது என்றார் பூசலார். பணம், பெரும் பொருட்செலவில் கட்டப்படும் கோவிலை விட தீவிர பக்தியால் ஒருவர் மனதிலெழுப்பும் ஆலயம் பல மடங்கு உயர்வானது என்பதை இறைவன் மன்னருக்கும் மக்களுக்கும் உணர்த்தினார்..

இதுவே பூசலார் புராணத்தின் சுருக்கம். எனவே இங்கிருக்கும் சிவபெருமானுக்கு இருதயாலீஸ்வரர் என்று பெயர். இங்கிருக்கும் அம்பிகைக்கு மரகதாம்பிகை என்பது திருப்பெயர். இதய கோளாறு மற்றும் பிரச்சனை உள்ளவர்கள் இங்கே வழிபடுவது வழக்கம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News