ஆன்மீக பாதையில் இருப்பவர்கள் சாத்வீக உணவை உண்ண வேண்டும் என்பது ஏன்?
By : Kanaga Thooriga
மனிதர்களுக்கு மூன்று விதமான குணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சாத்வீக குணம், ரஜோ குணம் மற்றும் தாமச குணம். இதில் சாத்வீக குணம் என்பது நல்ல அதிர்வுகள் நிரம்பியதாகவும், உணர்வின் அடிப்படையில் நல்ல சமநிலையுடன் கூடிய நிலையாகவும் கருதப்படுகிறது. ரஜோ குணம் என்பது கோபம், உக்கிரம் போன்ர தீவிரமான உணர்வு நிலையை உடையதாகவும். தாமச குணம் என்பது மந்தம் சோபேறித்தனம் ஆகியவையின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், நாம் உட்கொள்ளும் உணவுகளும் இந்த மூன்று தன்மைகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, சைவமாக இருந்த போதிலும் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டும் ரஜோ மற்றும் தாமச குணத்தை தூண்டக்கூடிய உணவு பொருளாக கருதப்படுகிறது.
இதில் ரஜோ குணமும், தாமச குணமும் சிறந்தது அல்ல என்று தவறாக பொருள் கொள்ள கூடாது. இந்த இரண்டு குணத்திடம் இருக்கும் சிக்கல் யாதெனில், இதனை முறையாக கையாளாவிட்டால், அவை நமக்கு சில எதிர்பாராத தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக ரஜோ குணம் என்பது மிக தீவிரமானது அறம் சார்ந்த கோபம் சரியானதே. ஆனால் அதுவே முன் கோபமாகவோ அல்லது நிதானமிழக்கும் கோபமாகவோ உருமாறினால் அவை தேவையற்ற எதிர்விளைவுகளை உருவாக்கும்.
எனவே பிராண சக்தி குறைவான பொருட்களை உட்கொள்கிற போது அவை எதிர்விளைவை உருவாக்கும் உணர்வுகளை அதிகம் தூண்டும். மனமும் உடலும் எத்தனை தூரம் சுத்திகரிப்புடன் இருக்கிறதோ, அதே அளவு தூய்மையான சிந்தனைகளை ஒருவர் பெற முடியும். தூய்மையான சிந்தனைகளே புனிதமான செயல்களாக மாறுகின்றது. இந்த தூய்மையான சிந்தனையை, மனநிலையை ஒருவர் பெற வேண்டுமெனில் அதற்கு உதவிப்புரிய கூடிய உணவுவகைகளை உட்கொள்ள வேண்டும்.
அந்த நிலையை ஒருவர் எளிமையாக அடைவதற்காக தான் இது போன்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டன. வெங்காயமும், பூண்டும் ஒரு உதாரணம் மட்டுமே, இந்த இரண்டை உட்கொள்வதால் தீவிர ஆன்மிக சாதனாக்களில் ஈடுபடுவோருக்கு தூய்மையான சுவாச கிடைக்காமல் போகலாம். எனவே இதை தவிர்க்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் சராசரியாக, குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு இவையிரண்டும் போதிய அளவில் வழங்கப்பட வேண்டும். காரணம் இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல முக்கிய போஷாக்குகள் உண்டு. எந்த உணவாயினும், அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான்.