பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் அணிவதற்கு பின்னிருக்கும் ஆச்சர்ய காரணம்
By : Kanaga Thooriga
இந்திய சமூகத்தில் குங்குமத்திற்கு என்றோர் முக்கியத்துவம் உண்டு. நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது மிகவும் புனிதமானதாக, கலாச்சார முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. இந்த பாரம்பரியம் இன்று நேற்று தோன்றியது அல்ல. பல நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு வரும் வழக்கங்களுள் ஒன்று.
சுமங்கலி பெண்கள் நெற்றியில் அணிவதற்கான பொதுவான காரணமாக சொல்லப்படுவது, கணவன் மார்களின் நீண்ட ஆயுளுக்காக என்பதே ஆகும். திருமண வைபவத்தில் முதன் முறையாக கணவன் தன் மனைவிக்கு குங்குமம் அணிவிப்பதை திருமண சடங்குகளுள் முதன்மையானதாக கொண்டிருக்கிறோம். இதை குங்கும தானம் எனவும் சொல்வதுண்டு.
சிவப்பு நிறம் என்பது அம்பிகை பராசக்தியின் அம்சம். எனவே அந்த சிவப்பு நிறத்திலான குங்குமத்தை கணவன் தன் மனைவிக்கு அணிவிக்கும் போது அவ்விருவரின் நலனையும் அன்னை பராசக்தி பார்த்து கொள்வதாக ஐதீகம். இந்து கலாச்சாரத்தில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குங்கும கலாச்சாரம் இருந்து வருகிறது. ஹாரப்பா காலத்தில் இருந்தே பெண்களின் வகிடில் குங்குமம் இருந்ததற்கான சான்றுகள் இருந்துள்ளன.
ராதை, சீதை, திரெளபதி ஆகிய காப்பிய நாயகிகளும் குங்குமம் பூண்டிருந்ததற்கான வரலாற்று குறிப்புகள் நம் இலக்கியங்களிலும், மரபுகளிலும் உண்டு. மேலும் நமது புராணங்களிலும மற்றும் லலிதா சஹஸ்ஹரநாமம், செளந்தர்ய லஹரி ஆகியவற்றிலும் குங்குமத்திற்கான குறிப்புகள் உண்டு.
குங்குமம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அறிவியல் ரீதியாக ஒருவரின் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதாலும் இந்த பழக்கம் அறிவியல் ரீதியாகவும், ஆத்ம ரீதியாகவும் நம் மக்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நெற்றியில் உருவாகும் தேவையற்ற நீரை உறிஞ்சும் தன்மை குங்குமத்திற்கு உண்டு. இதனால் ஒருவருக்கு பெண்களுக்கு கவனிக்கும் தன்மை அதிகரிக்கிறது.
மேலும் தீய திருஷ்டிகள், தீய ஆற்றல் ஆகியவற்றை தடுக்கும் தன்மையும் சிவப்பு நிறத்திற்கு உண்டு. எனவே எதிர்மறை ஆற்றலை தடுப்பதற்காக குங்குமத்தை பயன்படுத்தும் பழக்கமும் நம்மிடையே உண்டு. நம் மரபின் அடையாளமாக, திருமணத்தின் குறியீடாக, பாரம்பரிய மதிப்பினை பறைசாற்றும் வகையில் குங்குமம் அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.
குங்குமத்தை பெண்கள் மட்டுமின்றி சக்தி, இலட்சுமி தேவி என பெண் அம்சங்களை வழிபடுகிற போது ஆண் பெண் குழந்தைகள் என்ற எந்த பேதமுமின்றி அனைவரும் அணியும் பழக்கமும் நம்மிடையே உண்டு. எனவே நம்முடைய எந்தவொரும் செயலும் நமக்குணர்த்தும் பாடம் ஒன்று தான் அது, நம் ஒவ்வொரு அசைவிற்கு பின்னும் ஒரு காரண காரியம் உண்டென்பதே.