தண்ணீரை கூட புனிதமாக மாற்றும் துளசி நம் வாழ்வில் நிகழ்த்தும் அதிசயம்!
By : Kanaga Thooriga
வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது. விஷ்ணு பெருமானுடன் நாம் தொடர்ந்து இணைந்திருக்க இந்த துளசி மாலை ஒரு கருவியாக உதவுவதாக நம்பப்படுகிறது.
உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்பு படுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களிலிருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.
துளசி மாலையை ஏந்தியவாறு சொல்லப்படும் மந்திரம் "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே|| பார்ப்பதற்கு மிக எளிதான மந்திரமாக தோன்றினாலும் கலியுக பாபங்களிலிருந்து நமக்கு முக்தி அளிக்க கூடிய முக்கிய மந்திரம் இது என்கின்றனர் பெரியோர். இதிலிருக்கும் மற்றொரு முக்கிய அம்சம், பார்ப்பதற்கு இந்த சாதனா எளிமையாக இருப்பதாலேயே பலரும் எளிமையானது தானே என இதை கூட கடைப்பிடிக்காமல் விட்டு விடுகின்றனர்.
இந்த மாலையை கையில் வைத்திருக்கும் அல்லது அணிந்திருக்கும் எவரும் இந்த வித்தியாசத்தை உணர கூடும். அதாவது, அவர்கள் இந்த மாலையுடன் இருக்கும் போது, அவர்களின் கவனம் சிதறாமல் மிகவும் கவனத்துடன் பிரார்த்தனையில் வழிபாட்டில் இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி கையில் துளசி மாலையை வைத்தவாறே மந்திர உச்சாடனம் செய்வது நம்மை கிருஷ்ண பெருமானுக்கு மிக அருகில் எடுத்து செல்லும் வல்லமை கொண்டது என நம்புகின்றனர் பக்தர்கள்.
இந்த துளசி மாலையில் 108 மணிகள் இருப்பது வழக்கம். இந்த மணிகளை ஒவ்வொன்றாக நகர்த்தி மந்திரம் அல்லது ஸ்லோகம் சொல்கிற போது ஒலியின் சக்தி மிகுந்த ஆரா நம்மை சுற்றி உருவாகிறது. இதன் மூலம் எளிமையாக நாம் தியான நிலைக்குள் சென்று விட முடியும். இத்தனை வல்லமைகளையும் பெற்ற துளசியை, துளசி மாலையை நாம் அனுதினமும் ஆராதித்து வர நம் சகல துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் வெறும் தண்ணீரை கூட புனித நீராக மாற்றும் துளசி நம் வாழ்வையும் அர்த்தம் மிகுந்ததாக மாற்றும்.