ஜோதிர்லிங்கங்களின் வரிசையில் கடைசியாக இருக்கும் கிரிஸ்னேஸ்வரர்! ஆலய அதிசயம்
By : Kanaga Thooriga
கிரிஸ்னேஸ்வர் எனும் ஆலயம் அவுரங்காபாத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள வேருல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. எல்லோரா குகைகளுக்கு மிக அருகாமையில் அதாவது 2 கி.மீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம். ஜோதிர்லிங்கம் கோவில்களின் வரிசையில் இது இறுதியான கோவிலாக உள்ளது.
இங்கு குடிக்கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு பல்வேறு திருப்பெயர்கள் உண்டு. குஷ்மேஸ்வரர், க்ருஷ்மேஸ்வரர் மற்றும் கிரிஸ்னேஸ்வரர் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். மற்றும் இங்கிருக்கும் அம்பாளுக்கு குங்குமணேசுவரி என்பது திருப்பெயராகும்.
தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் இந்த ஆலயம் சத்திரபதி சிவாஜியின் பாட்டனாரான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் என்பவரால் 16 நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. முகாலயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கோவில் பல முறை தாக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில் ஒருமுறை இந்த கிராமத்தில் சுதர்மர் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியான சுதேஹா. இருவருக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் வருத்தமடைந்த சுதேஹா தன்னுடைய தங்கையான கிருஷ்ணையை தன்னுடைய கணவருக்கு இரண்டாம் தாரமாக மணம் முடித்தார். கிருஷ்ணைக்கும் சுதர்மருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சற்று பொறாமை அடைந்த சுதேஹா அந்த குழந்தையை கொன்று அருகிலிருந்த ஆற்றில் வீசினால்.
சுதேஹாவின் சகோதரியான கிருஷ்ணை தீவிரமான சிவ பக்தை. தினமும் 108 லிங்கங்களை செய்து வழிபட்டு அந்த லிங்கங்களை ஆற்றில் கரைப்பது அவரது தலையாய கடமைகளுள் ஒன்று. தன் மகனை தன் சொந்த சகோதரியே கொன்று விட்டாள் என்பது தெரிந்தும், சிவபெருமான் தன் மகனை காப்பாற்றுவார் என முழுமையாக நம்பி அன்றும் 108 சிவலிங்கங்களை செய்து பூஜித்து அதை ஆற்றில் கரைத்த போது இறைவன் அவள் மகனை உயிர்ப்பித்து தந்தார். அப்போது அவரே இங்கு அருள் பாலிக்க வேண்டும் என கேட்டுகொண்டதற்கிணங்க இங்கே கிரிஸ்னேஸ்வரர் அருள் பாலிக்கிறார்.
மற்ற ஜோதிர்லிங்க கோவில்களை ஒப்பிடுகையில் இது அளவில் சிறிய கோவிலாக கருதப்படுகிறது.