இந்தியாவிலேயே பெரிய கோவில் தீர்த்தம், தவழும் வடிவில் உற்சவம் அதியங்கள் நிறைந்த ஆலயம்!
By : Kanaga Thooriga
தமிழகத்தின் திருவாரூர் பகுதியில் அமைந்துள்ளது ராஜகோபாலசுவாமி ஆலயம். கிருஷ்ணபரமாத்மாவின் மறு உருவானவர் ராஜகோபால சுவாமி. 23 ஏக்கர் பரப்பரளவில் பரந்து விரிந்து இருக்கும் இந்த ஆலயம் இந்தியாவிலுள்ள முக்கியமான வைஷ்ணவ தலங்களுள் ஒன்றாகும். குருவாயூரடன் சேர்த்து இக்கோவிலை தக்ஷிண த்வாரகா (அ) தென் துவாரகை என்று அழைப்பார்கள்.
இங்குள்ள மூலவருக்கு ராஜகோபாலர் என்பது திருப்பெயராகும். இங்குள்ள அம்பிகைக்கு செங்கமலத்தாயார் என்பது திருப்பெயராக உள்ளது.
ஆதியில் இக்கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது பின் சோழ பேரரசர்களான மூன்றாம் ராஜராஜ சோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆகியோரால் புணரமைக்கப்பட்டு, 16 ஆம் நூற்றாண்டில் தஞ்சை -நாயக்கர்களால் விரிவுப்படுத்தப்பட்டது. 192 அடி உயரத்தில் கோபுரத்தை உடைய இக்கோவிலில் ஹரித்ரா நதி எனும் கோவில் தீர்த்தம் கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. இதுவே இந்தியவிலுள்ள கோவில் தீர்த்தங்களுள் மிகப்பெரிய தீர்த்தமாக கருதப்படுகிறது. முனிவர்கள் பலர் தவமிருந்து இங்கே கண்ணனை தரிசித்தனர் என்பதன் நினைவாக இந்த தீர்த்தம் யமுனை நதிக்கு நிகராக கருதப்படுகிறது. அதனாலேயே தீர்த்தமாக இருந்த போதும் இதனை நதியென்று அழைக்கின்றனர். இந்த தீர்த்தத்தில் ஆனி பெளர்ணமியில் தெப்ப தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
பலராமரை கொல்ல கம்சன் குவலயா பீடம் எனும் யானையை ஏவிய போது அதனை அடக்கினான் கண்ணன் அதன் நினைவாக இந்த கோவிலில் கையைல் தந்தத்துடன் இடையர் குலத்தை சேர்ந்த சிறுவனாக காட்சி தருகிறார். தலைபாகை அணிந்து, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். குழந்தைகள் அணியும் அணிகலன்களான காலில் தண்டை, கொலுசு, இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து போன்றவற்றையும் அணிந்து பசு மற்றும் இரண்டு கன்றுகளுடன் இங்கிவர் காட்சி தரும் அழகில் மயங்காதவர் இல்லை.
இங்கிருக்கும் உற்சவரின் பெயர் தான் ராஜகோபாலர், மூலவரை வாசுதேவர் என்றழைக்கின்றனர். உற்சவரான ராஜகோபாலருக்கு ராஜ மன்னார் என்ற பெயரும் உண்டு. அதனால் தான் இந்த ஊர் மன்னார்குடி என்ற பெயரில் அழைக்கப்படுவதாக சொல்லப்படுவதுமுண்டு.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில் இங்கு நிகழும் பங்குனி விழாவில் 18 நாட்களில் கிருஷ்ணனின் 32 லீலைகளும் அலங்கரிப்படுகிறது. இதில் 16 ஆம் நாள் நிகழும் வெண்ணை தாழி உற்சவம் மிக விஷேசமானது, கண்ணன் தவழும் வடிவில் கையில் வெண்ணை பானையுடன் வீதி உலா செல்கிறார். அப்போது வீதி நெடுகிலும் மக்கள் கிருஷ்ணனின் மீது வெண்ணையை வீசுவது வழக்கம்.
இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்படவில்லை எனினும், இங்கு பல ஆழ்வார்கள் வந்து வணங்கிய குறிப்புகள் உண்டு. திருமங்கையாழ்வார் தான் இந்த கோவிலின் கொடிகம்பத்தை அமைத்தார் என்ற குறிப்பும் உண்டு. கர்நாடக சங்கிதத்தின் பிதாமகனாக கருதப்படும் ஶ்ரீ புரந்தர தாசர் இங்குள்ள கண்ணனின் மீது புகழ்பெற்ற கீர்த்தனைகளை பாடியுள்ளார்.