Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தக்‌ஷிணாமூர்த்தியின் திருவுருவம் கொண்ட அதிசய கோவில்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தக்‌ஷிணாமூர்த்தியின் திருவுருவம் கொண்ட அதிசய கோவில்

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  16 Aug 2022 2:40 AM GMT

கோவை மாவட்டம் அன்னூருக்கு அருகே இருக்கும் கோவில் பாளையத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காலகாலேஸ்வரர் ஆலயம். இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இந்த கோவில் கிட்டதட்ட 2000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். தனக்கு நேர்ந்த சாபத்திலிருந்து விடுபட எம தர்மன் சிவலிங்கம் செய்து இங்கே வணங்கினார் என்பது ஐதீகம். எமனுக்கு காலன் என்ற பெயருண்டு.

காலனுக்கே குருவாக இருப்பதால் இங்கிருக்கும் சிவபெருமானுக்கு காலகாலேஸ்வரர் என்பது திருப்பெயர். இங்கிருக்கும் அம்பாளுக்கு கருணாகரவல்லி என்பது திருப்பெயர்.

இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். கோவில்பாளையத்தில் கெளசிகா நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள தக்‌ஷிணாமூர்த்தி திருவுருவம் ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவுருவ சிலையாக கருதப்படுகிறது. தக்‌ஷிணாமூர்த்தியை போலவே இங்கிருக்கும் நந்தியும் சிறப்பு வாய்ந்தவராவார். மற்ற கோவில்களில் இருப்பதை போல அல்லாமல் இங்கிருக்கும் நந்தி ஒரு காலத்தில் பச்சை நிறத்தில் தோன்றிவந்தார் அதனால் இவரை மரகத நந்தி என்றும் அழைப்பதுண்டு.

இங்கிருக்கும் மூலவரின் சிறப்பு யாதெனில் அவருடைய திருவுருவம் மணல் மற்றும் நுரையால் செய்யப்பட்டது எனவே இவருக்கு தயிர், நெய், பஞ்சாமிர்தம் ஆகியவற்றில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இங்கிருக்கும் சிவபெருமான் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையே முருக பெருமானின் சந்நிதி சோமஸ்கந்தர் விடிவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் முருக பெருமானுக்கு கால சுப்ரமணியர் என்பது திருப்பெயர்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் ஸ்தல வரலாறு யாதெனில் மார்கண்டேயருக்கு ஆயுள் 16 வயது வரை மட்டும் தான். அவருக்கு பதினாறு வயது ஆன போது அவருடைய உயிரை பறிக்க எமன் கிளம்பினார். அப்போது மார்கண்டேயர் திருக்கடையூரில் இருக்கிற சிவபெருமானை தன் இருக்கையால் கட்டி அணைத்து தன்னை காக்கும் படி வேண்டினார். தன் பக்தரின் உயிரை பறிக்க வந்த எமன் மீது கோபம் கொண்ட சிவபெருமான் அவரை உதைக்க. அந்த சாபத்தால் அவர் மானுட ரூபம் கொண்டு கெளசிக நதியிருக்கும் இந்த இடத்தில் வந்து சேர்ந்தார்.

மானுட ரூபத்திலிருந்த எமனுக்கு சிவ வழிபாடு செய்ய எந்தவித கல்லோ, ருத்ராக்‌ஷமோ அல்லது விபூதியோ கிடைக்கவில்லை. அதனால் எம தர்மன் ஒரு குச்சியை எடுத்து நிலத்தில் குத்தவே அதிலிருந்து பெருகிய நுரையை மணலோடு குழைத்து சிவலிங்கம் செய்து வழிபட்டார். அதே கெளசிகாபுரியில் தவத்திலிருந்த விஸ்வாமித்ரர் இந்த நிகழ்வை உணர்ந்து அங்கே தோன்றி, எமனிடம் நீ சிவபெருமானை தொழுததால் உன் சாபம் நீங்க பெற்றது. இனி நீ பழையவாறே உன் தொழிலை தொடங்கலாம் என்றார்.

எமதர்மர் வழிபட்டு விட்டு சென்ற அந்த லிங்கத்தை நிர்மாணித்தவர் விஸ்வாமித்ரர். இந்த கோவிலில் சாந்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியவற்றை செய்வது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News