Kathir News
Begin typing your search above and press return to search.

வெள்ளை நிற லிங்கம்! அரிய தரிசனம் நல்கும் ஆச்சர்ய பால்வண்ணநாதர் ஆலயம்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் ஆலயம், கடலூர்

வெள்ளை நிற லிங்கம்! அரிய தரிசனம் நல்கும் ஆச்சர்ய பால்வண்ணநாதர் ஆலயம்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  2 Nov 2022 12:31 AM GMT

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் ஆலயம் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவப்புரியில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மூலவருக்கு பால்வண்ணநாதர் என்றும் அம்பாளுக்கு வேதநாயகி என்றும் பெயர். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. அதில் ஊன்றீஸ்வரர் மற்றும் மின்னொளி அம்மன் சந்நிதி முதன்மையானதாக கருதப்படுகிறது. காசி வாரணாசியில் இருப்பதை போன்றே பைரவர் இங்கே குடிகொண்டிருப்பதால் இந்த ஆலயத்தை பைரவர் கோவில் என்று அழைப்பதும் உண்டு.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், சிவனும் பார்வதியும் அகஸ்திய முனிவருக்கு இத்தலத்தில் காட்சி அளித்ததாக சொல்லப் படுகிறது. அகஸ்தியர் சிவ தரிசனம் பெற்ற எட்டு ஆலயங்களில் இந்த கோவிலும் ஒன்று. கபில முனி லிங்கத்தை பிடித்து பிரதிஷ்டை செய்ய எண்ணினார். இந்த ஊரில் பசுக்கள் தாமாகவே பால் கறந்த காரணத்தால் இவ்வூரின் மணல் வெள்ளை நிறமாக இருந்தது. அந்த வெள்ளை நிற மணலில் லிங்கம் அமைத்து பிரதிஷ்டை செய்ய முற்பட்ட போது அவ்வூர் அரசனின் குதிரை கால் குளம்பு பட்டு லிங்கம் இரண்டாக பிளந்து விட்டது. இதை எண்ணி வருத்தம் கொண்ட கபிலர் வேறொரு லிங்கத்தை செய்ய முனைந்தார். அப்போது சிவபெருமான் பார்வதியோடு தம்பதி சமயந்தராக காட்சி அளித்து, பிளவு பட்டிருந்தாலும் இந்த லிங்கத்தையே பிரதிஷ்டை செய்க என்றனர். காரணம், இந்த மண்ணில் காமதேனுவும் பால் சுரந்துள்ளது, அதனால் அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்கள் சகல செல்வங்களும் பெறுவதாகுக எனக்கூறி அதையே பிரதிஷ்டை செய்ய அருளினார்கள்.

அதன் படி இன்றும் பிளவுபட்ட வெள்ளை நிற லிங்கத்திற்கு தான் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், எங்கும் இல்லாத வகையில் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நடராஜ பெருமான் தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருக்கிறார். இவர் அருகே சிவகாமி அம்பாள் அவர்தம் தோழிகளான விஜயா சரஸ்வதியோடு காட்சி தருகிறார்.

மேலும் இங்குள்ள விநாயகருக்கு விஜய விநாயகர் என்று பெயர். இவரை வணங்கினால் சகல காரியத்திலும் வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News