சகல பாவங்களையும் போக்கும் மாசி மகம்!
மாசி மாதத்தில் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் நுழையும் தினத்தை மாசி மகம் என்கிறோம்.

மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது. மகம் நட்சத்திரத்தில் சந்திரன் நுழையும் தினத்தை மாசி மகம் என்கிறோம். இந்த நாளில் ஆலயங்கள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாசிமகம் வரும் நாளை கடலாடும் நாள், தீர்த்தமாடும் நாள் என்று அழைப்பார்கள். தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பை பற்றி கூற புராணத்தில் ஒரு தகவலும் சொல்லப்பட்டுள்ளது.
ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதிலிருந்து விடுபட நினைத்த வருணன் சிவபெருமானின் நினைத்து பிரார்த்தித்தார். அதே சமயம் மழை கடவுளான வருணன் கட்டுண்ட காரணத்தால் உலகில் மழையில்லாமல் வளர்ச்சியும் பஞ்சமும் நிலவியது. அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார் .அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மகத்திருநாள் என்று சொல்லப்படுகிறது.
விடுதலை பெற்ற வருணன் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினான். பின்னர் ஈசனிடம் இறைவா நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்டு கடலில் கிடந்த போது நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன் .அதன் பயனாக எனக்கு விடுதலை கிடைத்தது. அதேபோல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும் பிறவி துன்பங்களையும் நீக்கி அருள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார்.
அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும் பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவன்கோயிலுக்கு செல்ல வேண்டும்.மதியம் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு இரவு பால்பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல் இறைவன் சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார திருவாசகப் பாடல்களை பாராயணம் செய்யலாம். இந்த விரதத்தை கடைபிடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
மாசி மகத்தன்று பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது நன்மை அளிக்கும். இந்த புனித நீராடலால் சகல தோஷங்களும் நீங்கும்.குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம். அன்றுதான் தட்சனின் மகளாக பார்வதி தேவி அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. சிவபெருமானின் சக்தியாக தேவியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டான். அதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி தட்சணின் மகளாக அவதரித்தாள்.
அவளுக்கு தாட்சாயணி என்று பெயரிட்டு வளர்த்து வந்த தட்சன் தன்மகளை சிவபெருமானுக்கு திருமணமும் செய்து வைத்தான்.அன்னை உமாதேவி அவதரித்த மாசி மகம் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் அம்பாளையும் வழிபட்டு பெரும் பேறு பெறலாம் .மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக விளங்குபவர் கேது பகவான். இவர் ஞானத்தையும் முக்தியையும் அருள்பவர் என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்க கூடிய இவரையும் மாசிமகம் அன்று வழிபாடு செய்யலாம்.