Kathir News
Begin typing your search above and press return to search.

72 அடி உயர பிரம்மாண்டமான அய்யனார் உள்ள ஆலயம் - எங்கு தெரியுமா?

மலேசியா என்றாலே பிரம்மாண்டம் தான். மிகப்பெரிய முருகன் கோவில் பிரம்மாண்டமான பச்சையம்மன் கோவில் என்று ஆன்மீக ரீதியாக பல ஆலயங்கள் மலேசியாவின் அடையாளங்களாக இருக்கின்றன அந்த வரிசையில் ஒன்றுதான் ஓம் ஸ்ரீ அய்யனார் ஆலயம்.

72 அடி உயர பிரம்மாண்டமான அய்யனார் உள்ள ஆலயம் - எங்கு தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  27 Jun 2024 1:17 PM GMT

தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளி ஆன பெரியம்மா என்ற பெண் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மற்றும் களிமண் பொருட்களைக் கொண்டு அய்யனார் சிலை ஒன்றை சிறிய அளவில் உருவாக்கினார். காலப்போக்கில் இங்கே வழிபடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் தற்போது இந்த ஆலயம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் பழைய சிறிய அய்யனார் சிலையே தற்போதும் இங்கு வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது .

இந்த ஆலயமானது பல ஏக்கர் பரப்பளவு உள்ள ஒரு வகை பனைமரத் தோட்டத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றி ஆங்காங்கே காளையைத் தழுவும் இரண்டு வீரர்கள் கண், காது, வாயை மூடிய மூன்று குரங்குகள் , பசுத்தோல் போர்த்திய புலி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளன. மயில், வெள்ளை காகம் உள்ளிட்ட பலவிதமான பறவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாகதேவி, சந்நிதி விநாயகர் கோவில் போன்ற ஆலயங்களும் அய்யனார் கோவிலை சுற்றிலும் அமைந்திருக்கிறது.

அய்யனார் கோவில் வித்தியாசமான முறையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் முகப்பில் வலது புறமும் ,இடது புறமும் வெள்ளை குதிரைகளின் மீது இரண்டு வீரர்கள் வலது கையில் கத்தியை பிடித்தபடி கோவிலுக்கு வெளியே பார்த்தபடி வீற்றிருக்கிறார்கள். இந்த இரண்டு குதிரை வீரர்களின் நடுவில் ஓங்கி உயர்ந்த கொடிமரம் காணப்படுகிறது. சிம்ம வாகனம் உள்ளது. செவ்வக வடிவத்தில் உள்ள இந்த ஆலயத்தில் நான்கு மூலையிலும் கட்டிடத்தை தாங்கும் தூண்களுக்கு பதிலாக தூணை ஒருவர் தாங்குவது போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உள்பகுதிகளில் இரண்டு சுற்றாக தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. வெளி சுற்றில் தூண்களை ஒட்டி யாளி சிற்பமும் , உள் சுற்றான அய்யனாரின் கருவறை முன் உள்ள தூண்களில் முனிவர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன .இந்த முனிவரின் சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தோரணையில் இருக்கிறது .பொதுவாக ஆலயத்தின் கருவறை மேற்புறம் விமானம் போன்ற அமைப்பு காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தின் கருவறையின் மேலே பிரம்மாண்ட அய்யனார் சிலையே விமானம் போன்று அமைக்கப்பட்டுள்ளது .

72 அடி உயரமுள்ள இந்து அய்யனார் இடது காலை மடக்கியும் வலது காலை தொங்க விட்டும் அந்தக் காலை அசுரனின் தலை மீது வைத்து அழுத்திய நிலையிலும் காணப்படுகிறார் .மேலும் அவரது வலது கை சின் முத்திரையுடனும், இடதுகை ஈட்டி ஒன்றைத் தாங்கிய நிலையிலும் உள்ளது .கருவறையை சுற்றிலும் தட்சிணாமூர்த்தி , நடராஜர், கைலாய சிவன் ஆகியோரின் சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன .தைபிங் நகரில் இருந்து சுமார் 30 நிமிட பயண தூரத்தில் இந்த ஆலயம் இயற்கை சூழலுக்கு நடுவில் அமைந்திருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News