Kathir News
Begin typing your search above and press return to search.

பங்குனி உத்திரத்தில் மட்டும் பூ பூக்கும் அதிசய தல விருட்சம்!

நெல்லை மாவட்டம் தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா கோவில் என்ற ஒரு கோவிலில் பங்குனி உத்திரத்தன்று மட்டும் பூப்பூக்கும் அதிசய தல விருட்சம் உள்ளது.

பங்குனி உத்திரத்தில் மட்டும் பூ பூக்கும் அதிசய தல விருட்சம்!
X

KarthigaBy : Karthiga

  |  5 April 2023 12:16 AM GMT

பங்குனி உத்திரத்தன்று குலதெய்வ கோவிலில் வழிபடுவது சிறப்புக்குரியது. பல்வேறு ஊர்களில் வசிப்பவர்களும் குலதெய்வ கோவிலில் ஒன்று கூடி வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தெற்கு கருங்குளம் பூசாஸ்தா கோவிலும் குலதெய்வ வழிபாட்டுக்கு புகழ் பெற்றது .காவல்கிணற்றில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு கருங்குளம் பைபாஸ் சாலையோரம் இந்த பூ சாஸ்தா கோவில் அமைந்துள்ளது .


பெயரில் பூவின் மென்மை இருந்தாலும் கோவிலின் வரலாறு சிறு அச்சத்துடன் பயபக்தியை மேலிடச் செய்வதாகவே இருக்கிறது. பழங்காலத்தில் தெற்கு கருங்குளத்தில் செல்வாக்கு மிக்க பக்தர் ஒருவர் வசித்தார். அவர் பூ சாஸ்தா கோவில் அருகில் இருந்து பாறாங்கலில் ஒரு செக்கை செய்து வீட்டிற்கு எடுத்து வர முயன்றார். ஆனால் எவ்வளவோ முயன்றும் அந்த கல் செக்கு நகராததால் அவர் குழப்பம் அடைந்தார் . அப்போது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் மீது சாமி அருள் வந்தது.


அப்போது அவர் 'பங்குனி உத்திரத்தில் நான் கேட்கும் படையல் அளித்தால் செக்கு நகரும் 'என அந்த பக்தரிடம் கூறினார் .அதனை ஏற்றுக் கொண்ட அவரும் கோவிலில் சத்தியம் செய்து கொடுக்க செக்கு நகர்ந்தது. அதன் பிறகு பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்ற பக்தர் சாஸ்தாவிடம் என்ன படையல் வேண்டும் என்று கேட்க அப்போது அருள் வந்து சாமி ஆடிய அவர் கூறியதை கேட்டு அவர் அதிர்ந்து போனார் ."எனக்கு படையலாக நரபலி தர வேண்டும்" என பூ சாஸ்தா கேட்க சத்தியம் செய்து கொடுத்த பக்தர் செய்வதறியாது திகைத்தார்.


வேறு வழியின்றி தனது வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணை அவர் நரபலி கொடுத்தார். இனி ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று அந்த பக்தர் நரபலி கொடுப்பார் என அஞ்சிய ஊர் மக்கள் அங்கிருந்து காலி செய்து விட்டு வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் பூ சாஸ்தா கோவில் நாளடைவில் பூஜை இன்றி கலை இழந்தது. இதற்கிடையே வேறு ஊர்களுக்குச் சென்ற மக்களும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டனர். இதற்கு தீர்வு காண நினைத்த அந்த ஊர் மக்கள் அனைவரும் மீண்டும் பூ சாஸ்தா கோவிலில் கூடி நின்று கண்ணீர் மல்க வணங்கி வழிபட்டனர்.


அப்போது "நரபலிக்கு பதிலாக ஒரு கோட்டை நெல் குத்தி கொழுக்கட்டையாக செய்து பங்குனி உத்திரத்தில் படையலிட்டால் உங்கள் கஷ்டம் தீரும்" என அருள் வாக்கு தந்தார் பூ சாஸ்தா. அன்று தொடங்கி இன்றுவரை பங்குனி உத்திரத்தன்று பூ சாஸ்தா கோவிலில் மெகா கொழுக்கட்டை படையல் தொடர்கிறது. இதற்கான நெல்லையும் அந்த பக்தர் வீட்டில் இருந்தே பரம்பரை பரம்பரையாக கொடுக்கின்றனர் .


பங்குனி உத்திரத்தன்று பூ சாஸ்தா கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா , ஆந்திரா, புதுச்சேரி , மராட்டிய உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். அன்றைய தினம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பூ சாஸ்தா கோவிலில் தலவிருட்சமாக சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசயமரம் உள்ளது. அந்த மரத்தின் பெயர் கூட யாருக்கும் தெரியவில்லை .


அந்த அதிசய மரமானது ஆண்டில் பங்குனி உத்திரத்தன்று மட்டும் ஒரே ஒரு பூவை தோற்றுவிக்கின்றது. அந்த பூவும் அன்றைய தினமே உதிர்ந்து விடுகிறது. சில ஆண்டுகளில் இரு முறை பங்குனி உத்திரம் வரும்போது இரவில் உத்திர நட்சத்திரம் வரும் போது மட்டுமே அதிசயமரம் பூக்கின்றது. உத்திர நட்சத்திரம் தொடங்கும்போது பூக்க ஆரம்பித்து அந்த நட்சத்திரம் முடியும் போது பூ வாடி விடுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News