ஆடிப்பூரத் திருநாளும் அம்பிகை வழிபாடும்!
ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாளே 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள்.
By : Karthiga
ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும் யோகிகளும் தங்களுடைய தவத்தை தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. அம்பாளுக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல நம்மை படைத்த அன்னைக்கு ஆடிப்பூரநாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை.
இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்பிகைக்கு வலையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்க பயன்படுத்திய வளையல்கள் தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆடிப்பூரத்தை ஒட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும்.
அன்றைய தினம் அமம்மனுக்கு படைத்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களை பெற்று அணிந்து கொண்டால் மனம் போல் மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும் செய்யும் . அதோடு அம்பிகை தாய்மை கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது . ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையை அம்சம் நிறைந்துள்ளது.
எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால் எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கை, துணி, புடவை போன்ற மங்களப் பொருட்களை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறு பெற வளமும் நலமும் பெருக வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.