Kathir News
Begin typing your search above and press return to search.

வேதங்களை மீட்டுக் கொடுத்த ஆதி அரங்கநாதர்

திருவரங்கம் கோவிலுக்கு முன்பு தோன்றிய ஆதி திருவரங்கநாதரைப் பற்றி காண்போம்.

வேதங்களை மீட்டுக் கொடுத்த ஆதி அரங்கநாதர்
X

KarthigaBy : Karthiga

  |  23 Aug 2023 2:07 PM IST

சோமுகன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து பல வரங்களை பெற்றான். இதனால் பூமியையும் சர்வ லோகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முனிவர்களையும் தேவர்களையும் அடிமைகள் ஆக்கியதுடன் பிரம்மாவிடம் இருந்து வேத மந்திரங்களையும் பறிமுதல் செய்தான். மேலும் அவன் அந்த வேதங்களை கடலுக்கு அடியில் மறைத்து வைத்தான்.


ஏற்கனவே முனிவர்களும் தேவர்களும் தங்களை காத்தருள அரங்கநாதரிடம் வேண்டினர். இதை அடுத்து அரங்கநாதர் மச்ச அவதாரம் எடுத்து சோமுகனை கொன்று கடலுக்கு அடியில் வைத்திருந்த வேதங்களை மீட்டு எடுத்து வந்தார். பின்னர் ஆதி திருவரங்கத்தில் வைத்து பெருமாள் பிரம்மாவுக்கு மீண்டும் வேதங்களை அளித்ததாக வரலாறு கூறுகிறது .


கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் திருக்கோவிலூருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் அமைந்துள்ளது ஆதி திருவரங்கம் அரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் அரங்கநாதர் 29 அடி அகலத்தில் ஐந்து தலை ஆதிசேஷனத்தில் சயன நிலையில் ஸ்ரீதேவி மடியில் தலையும் பூமாதேவி மடியில் காலையும் வைத்த நிலையிலும் பிரம்மாவிற்கு வேதங்களை போதித்த படியும் உள்ள அரங்கநாதரின் கையை கருடாழ்வார் தன்னுடைய தோளில் தாங்கி இருக்கிறார்.


தாயார் அரங்கநாயகி தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். தற்போதைய திருச்சி திருவரங்கம் கோவிலுக்கு முன்பு தோன்றியதால் இந்த கோவில் ஆதி திருவரங்கம் என அழைக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் திருவண்ணாமலையிலிருந்து 31 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் ரிஷிவந்தியத்திலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலும் இக்கோவில் அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News