உயர்வு தரும் உழவாரப்பணி'யின் சிறப்புகள்
அடியார்கள் பலரும் அறிந்த விஷயம் உழவாரப்பணி. அதைப் பற்றி சில தகவல்கள்
By : Karthiga
அடியார்கள் பலரும் அறிந்த விஷயம்தான் உழவாரப்பணி. ஒரு சிலர் உழவாரப் பணியை பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். ஆனால் அது எப்படி நடைபெறும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள் .பழங்காலத்தில் ஆலயங்களில் கிடைத்த நைவேத்யம் மற்றும் சிறு வருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத்திற்குச் செய்யும் தொண்டாக கோவிலை தூய்மைப்படுத்தும் பணியை செய்து வந்தனர் .ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணியை விட சிறந்த புண்ணியம் தரும் செயல் வேறு இல்லை .தான் வாழ்ந்த காலம் முழுவதும் தள்ளாத வயதிலும் கூட உழவாரப் பணியை செய்து சிவ பெருமானின் பேரருளைப் பெற்றவர் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர்.
கோவிலில் புதர்மண்டி போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணியின் முதல் நோக்கம் இதைச் செய்ய தோசை கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவியைப் பயன்படுத்துவதற்கு உழவாரப்படை என்று பெயர்.அந்த உழவாரப்படையை தன்னுடைய கையில் தாங்கியபடி காட்சி தருபவர் திருநாவுக்கரசர். எப்போதும் உழவாரப்பணி மூலம் ஆலயத்தை தூய்மை செய்து பாடல்களைப் பாடுவது இவரது பணி.
சரி இந்த உழவாரப்பணியில் என்னென்ன வேலைகள் எல்லாம் வருகின்றன என்பதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.சிவாலயத்திற்குச் சென்று இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் கையில் இருக்கும் குப்பைகளை ஆலயத்திற்குள் போடுவதை தவிர்க்க வேண்டும்.ஆலயத்திற்குள் குப்பை போடும் பக்தர்களின் உள்ளத்தில் துன்பம் எனும் குப்பை எப்படி நீங்கும்?.
இது போன்ற ஆலயங்களில் சேரும் குப்பைகளை அகற்றுவது உழவாரப்பணியில் ஒரு பகுதி. ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு இறைவனின் பிரசாதமாக வழங்கப்படுவது திருநீரு. அதை சிலர் இறைவனின் அருள் வேண்டாம் என்பது போல ஆலயத்தில் ஆங்காங்கே இருக்கும் தூண்களில் கொட்டி விட்டுச் சென்று விடுவார்கள். அப்படி கொட்டப்பட்ட திருநீரை அகற்றி தூண்கள் ,பிரகாரங்களை சுத்தம் செய்வதும் இந்த பணியின் ஒரு பகுதி.
இறைவனுக்குச் சூட்டப்பட்ட மலர்களை நந்தவனத்தில் போடுவது, திருக்கோவில்களில் சேர்ந்து இருக்கும் ஒட்டடைகளை அகற்றுவது, இறைவனின் ஆடைகளை துவைப்பது ,அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது ,நந்தவனத்தை சுத்தம் செய்வது ,ஆலயத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தால் அதை அகற்றுவது, கோபுரங்களில் இருந்து சிறிய செடி கொடிகளை அகற்றுவது, சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று ஆலய கொடிமரம் மற்றும் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு சுத்தப்படுத்துவது போன்ற பணிகளும் இதில் அடக்கம்.
தவிர கல் திருமேனிகளுக்கு மாவு ,தயிர் சாற்றி அதன் மீது படிந்திருக்கும் அழுகை நீக்குவது ,ஆலயங்களில் மின்விளக்குகளை சரிசெய்வது, கோவிலை சுற்றி தினமும் கோலமிடுவது ,கற்பூர ஆலயத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு கற்பூர தீபத்தால் படிந்த கரும்புகை நீக்குவது ,கோவில் சுற்றுச் சுவர் மதில் சுவர்களை சுத்தம் செய்து அதற்கு வெள்ளை அடிப்பது போன்ற அனைத்தும் உழவாரப் பணிகளை அவற்றை இறைவனின் அருளோடு நமது மனமும் உடலும் உறுதியாகும் .