வாய்ப்பும் அற்புதமும் ஒருமுறை தான் வழங்கப்படும் கிருஷ்ணர் உணர்த்திய பாடம்
By : G Pradeep
மஹாபாரதம் என்பது பண்டைய இந்தியாவின் முக்கிய காப்பியங்களுள் ஒன்று. அதில் லட்சக்கணக்கான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. பைபிளை காட்டிலும் மூன்று மடங்கு விஸ்தாரமானது. ஒரு சில வரிகளில் கதையை சொல்லிவிட முடியும் என்ற போதும். அதில் இருக்கும் புராண கதைகள், நம்பிக்கைகள் கிளைக்கதைகள் சொல்லித்தீராதவை. அந்த வரிசையில் அந்த மாபெரும் காப்பியத்தில் மறைந்திருக்கும் சில அரிய கதைகளின் தொகுப்பு இங்கே.
கெளரவர்கள் பாரத போரில் கொஞ்சம் கொஞ்சமாக தோற்று வந்த வேளை. பீஷ்மர் தன் முழு பலத்தையும் இதில் பிரயோகிக்கவில்லை என்பது துரியோதனின் எண்ணம். இதனால் கோபம் கொண்ட துரியோதனன் பீஷ்மரை நோக்கி சென்று "நீங்கள் பாண்டவர் மேல் இருக்கும் பாசத்தால் இந்த போரினை உங்கள் முழுபலத்துடன் கையாளவில்லை "என்று வசைப்பாடினான். இதனால் சினமுற்ற பீஷ்மர் ஐந்து தங்க அம்புகளை எடுத்து அதில் மந்திரங்களை ஓதி, இந்த தங்க அம்புகளை கொண்டு நாளையே ஐந்து பாண்டவர்களையும் தான் வீழ்த்தி விடுவதாக சூழ் உரைத்தார்.
இந்த வார்த்தையில் நம்பிக்கை இல்லாத துரியோதனன், "அந்த ஐந்து தங்க அம்புகளையும் என் வசம் கொடுங்கள். நான் வைத்திருக்கிறேன். நாளை அதிகாலை நான் இதை உங்களிடம் வழங்குவேன் "என தன் வசம் வைத்து கொண்டான்.
சூழ்நிலை இவ்வாறு இருக்க அந்த ஐந்த்உ தங்க அம்புகள் எவ்வாறு பாண்டவர்கள் மீது பாயாமல் போனது என்பதை அறிய வேண்டுமெனில், அதனுள் ஒரு கிளைக்கதை உண்டு.
பாராத போர் உருவாவதற்கு முன்பு, பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த காலத்தில் துரியோதனன் அவனுடைய குடில்களை பாண்டவர்கள் வசித்த பகுதிக்கு அருகேயிருக்கும் குளத்திற்கு எதிர்புறத்தில் அமைத்திருந்தான். அப்போது ஒருமுறை, துரியோதனன் அந்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது, அங்கே கந்தர்வர் தோன்றினார். உடனே அவருடன் போரில் ஈடுபட்டான் துரியோதனன், இதில் தோல்வியடைந்து கந்தர்வனால் சிறைப்பிடிக்கப்பட்டான். அவ்வேளையில் கந்தர்வனிடமிருந்து துரியோதனனை காத்தவன் அர்ஜூனன். ஒரு சத்ரியனாக துரியோதனன் மிகுந்த வெட்கமடைந்தான். எனவே அர்ஜூனனை நோக்கி, "என்னை காத்ததற்காக என்ன வரம் வேண்டுமோ கேள் "என்றான். அதற்கு அர்ஜூனன் "எனக்கு தேவைப்படும் சூழலில் உன்னிடம் பரிசொன்றை கேட்கிறேன் தா " என கூறியிருந்தான்.
இந்த வரத்தை குறித்து இருவரும் மறந்திருந்த வேளையில், பாரத போர் நடந்து கொண்டிருந்த அந்த இரவு வேளையில், பீஷ்மரிடமிருந்து ஐந்து தங்க அம்புகளை துரியோதனன் பெற்ற செய்தியை அறிந்திருந்தார் கிருஷ்ண பரமாத்மா. இச்சூழலில், அர்ஜூனனிடம் அவன் துரியோதனனிடம் பெற்ற வரத்தை நினைவுப்படுத்தி, அந்த வரத்தின் மூலம் அந்த ஐந்து தங்க அம்புகளையும் பெற்று வரச்சொல்லி அனுப்பினார்.
கிருஷ்ணரின் வார்த்தையை ஏற்று துரியோதனனிடம் சென்று அர்ஜுனன் ஐந்து தங்க அம்புகளை பரிசாக கேட்ட போது அதிர்ச்சியடைந்த துரியோதனன் "இந்த தகவல் உனக்கு எவ்வாறு தெரியும் ? " என கேட்ட போது. "கிருஷ்ணரை தவிர வேறு யாரால் இதை சொல்ல முடியும் "என பதிலளித்தான். பிறப்பால் ஒரு சத்ரியன் என்பதால் அளித்த வரத்தை மீற இயலாமல் தன்னிடம் இருந்த ஐந்து தங்க அம்புகளை அர்ஜூனனுக்கு வழங்கினான். உடனே பீஷ்மரை நோக்கி விரைந்து சென்று மற்றுமொரு ஐந்து தங்க அம்புகளை துரியோதனன் கேட்ட போது, பீஷ்மர் சொன்னார் "என் மீது நம்பிக்கையின்றி அந்த ஐந்து அம்புகளை பெற்று சென்றாய், இனி அது போல் ஒரு அற்புதத்தை மீண்டும் உருவாக்க இயலாது.. "