தீபாவளி அன்று 'ஜாலி அலங்காரத்தில்' ஜொலிக்கும் அரங்கநாத பெருமாள்
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புக்குரிய தீபாவளி அன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் சில கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில்.
By : Karthiga
திருவரங்கம் அரங்கநாத பெருமாள் தீபாவளி திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவார். தீபாவளி அன்று பெருமாளுக்கு வெண்ணெய் காப்பிட்டு திருமஞ்சனம் செய்து புதிய வஸ்திரமனுவித்து அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று ஆழ்வார்களையும் ஆச்சாரியார்களையும் கிளி மண்டபத்துக்கு எழுந்தருள செய்த பின் திருமஞ்சனம் நடைபெறும் உற்சவரான பெருமாள் புறப்பட்டு சந்தன மண்டபத்துக்கு வந்ததும் வழிபாடுகள் நடைபெறும்.
அதற்கு பின் அவர் ஆஸ்தான மண்டபத்திற்கு வருவார். அங்கே பெருமாளுக்கு விசேஷமான ஜாலி அலங்காரம் செய்வர். இந்த அலங்காரம் தீபாவளி தினத்தில் மட்டுமே நடைபெறும் . ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு துணிகளின் மூட்டையாக கட்டி பெருமாள் திருவடிகளில் மேளதாளங்கள் முழங்க நாதஸ்வர இசை ஒலிக்க வேதபாராயணத்துடன் சமர்ப்பிப்பார்கள். பெருமாள் அங்கு எழுந்தருளியுள்ள ஆழ்வார்களுக்கும் பக்தர்களுக்கும் அருள் பாலித்து விட்டு கோவிலுக்கு திரும்புவார் .இந்த காட்சியை தீபாவளி திருநாளில் தரிசித்தால் ஆடைகளுக்கும் பண வரவுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படாது என்பது நம்பிக்கை.