Kathir News
Begin typing your search above and press return to search.

வளமான வாழ்வு தரும் வாழை மர பாலசுப்பிரமணியர்!

முருகனின் வரலாறுகளில் மிகவும் வித்தியாசமான வாழைமர சுப்பிரமணியர் ஆலயமும் கதையும்.

வளமான வாழ்வு தரும் வாழை மர பாலசுப்பிரமணியர்!

KarthigaBy : Karthiga

  |  4 Jan 2024 12:15 PM GMT

150 ஆண்டுகளுக்கு முன்பு துலுக்கன் குறிச்சி கிராமத்தில் தேரியப்பர்- வீரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வேலாயுதம் .இவர் தினமும் தனது அன்றாட விவசாய பணிகளை தொடங்கும் அதிகாலையில் வெம்பக்கோட்டை ஆற்றில் குளித்துவிட்டு வனமூர்த்தியில் லிங்கபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அத்துடன் இவர் மூலிகைகளை கொண்டு வைத்தியமும் செய்து வந்தார். அருள்வாக்கும் சொல்லி வந்தார்.


ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு முருகனை தரிசிக்க சென்ற போது வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமலும் இறைவனை தரிசிக்க முடியாமலும் வருத்தத்துடன் இல்லத்திற்கு வந்துவிட்டார். முருகனை தரிசிக்க முடியாத மனவேதனையில் எந்த பணியும் செய்யாமல் வீட்டில் இருந்தார். முருகனின் திருநாமத்தை கூறியபடியே கண்ணை அயர்ந்தார். அப்போது கனவில் இறைவன் தோன்றி என்னை காண நீ வெகு தூரம் வரவேண்டாம். நானே உன்னை தேடி உன் இருப்பிடம் வந்துவிட்டேன். நீ ஆசையாக பராமரித்து வந்த வாழை மர தோட்டத்தில் ஒரே ஒரு வாழை மரத்தில் மட்டும் குலை தள்ளி இருக்கும். அதில் தான் நான் குடிகொண்டு உள்ளேன் என கூறிவிட்டு மறைந்தார்.


மறுநாள் அதிகாலையில் வேலாயுதம் நீராடி விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கி சென்றார் . அங்கே இறைவன் கனவில் சொன்னபடியே ஒரு வாழைமரம் மட்டும் குலை தள்ளி இருந்தது . அன்று முதல் தினமும் அதிகாலை நீராடிவிட்டு முருகன் குடி கொண்டிருக்கும் வாழை மரத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்த செய்தி அக்கம்பக்கம் முழுவதும் பரவியது. இதை அடுத்து பொதுமக்களும் அந்த வாழை மரத்தை வழிபட்டு வந்தனர். நாட்கள் பல சென்றன.


ஒரு நாள் செவல்பட்டு ஜமீன்தாரின் பணியாட்கள் வாழைத்தோட்டம் நோக்கி வந்தனர் .அவர்கள் அரண்மனையின் பிரதான கணக்கு பிள்ளையாக இருப்பவரின் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மணப்பந்தலில் வைக்க குலை தள்ளிய வாழை வேண்டும். வேறு எங்கும் வாழை கிடைக்கவில்லை .ஆதலால் ஜமீன்தார் தங்களிடம் உள்ள வாழை மரத்தை வெட்டி எடுத்து வரும்படி உத்தரவிட்டார். எனவே இந்த குலை வாழையை தர வேண்டும் என கேட்டனர்.


அது கேட்டு அதிர்ச்சியடைந்த இந்த வேலாயுதம் இது சாதாரண வாழை அல்ல .இது முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் கோவில் .அதனால் தர முடியாது என்று மறுத்தார். இது பற்றி அந்த ஜமீன்தார் நானே நேரில் செல்கிறேன் என்று கூற மணமகனோ தான் செல்வதாக கூறி சென்றான். அவனிடமும் வாழை மரத்தை தர முடியாது என்று வேலாயுதம் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் அந்த மரத்தை வெட்ட அதிலிருந்து ரத்தம் வெளியேறியது .மேலும் அங்கு தோன்றிய நாகம் ஒன்று மணமகனை தீண்டியது. இதை அறிந்த ஜமீன்தாரும் கணக்கு பிள்ளையும் தோட்டத்திற்கு விரைந்து வந்த தங்களின் பிழையை மன்னித்து விடும்படியும் மணமகனின் உயிரை காப்பாற்றவும் வேண்டினார்.


இதை அடுத்து வேலாயுதம் தன் கையில் இருந்த பிறம்பை மணமகனின் மீது வைத்து முருகா முருகா முருகா என்று மூன்று முறை சொல்லவும் அவர் நல்லபடியாக உயிர்பிழைத்தார் என்று இந்த ஆலயத்திற்கு தல வரலாறு சொல்லப்படுகிறது .இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தோஷம் ,புத்திர தோஷம் நீங்குவதுடன் விஷக்கடி உள்ளிட்ட பல நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. குலம் தழைக்க வாழை மரத்தையே உதாரணமாக சொல்வர். ஆனால் இங்கு இறைவனை வாழைமரமாக இருந்து அருள்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது .


இந்த ஆலயம் தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும் மாலை ஐந்து முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும் . விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் வெம்பங்கோட்டை அருகே துலுக்கன் குறிச்சியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு சிவகாசி சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News