தேனீக்கள் தேனால் அபிஷேகம் செய்த மதுவனேஸ்வரர்!
திருவாரூர் மாவட்டம் திரு நன்னிலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது மதுவனேஸ்வரர் திருக்கோவில்.
By : Karthiga
கயிலை மலையில் சகல சாஸ்திரங்களையும் புராணங்களையும் உணர்ந்தவர் சூத மகாமுனிவர். சதானந்தன் முதலிய முனிவர்கள் சூத மகா முனிவரை வணங்கி புத்தியையும் முக்தியும் வழங்கும் சிதலங்களை பற்றி கேட்டறிந்தனர். அப்போது சூத முனிவர் திரு நன்னில பகுதியில் உள்ள இந்த திருத்தலத்தைப் பற்றி எடுத்துரைத்தார். கிருத யுகத்தில் சந்திர குலத்தில் தோன்றியவன் சோமபுரியை ஆட்சி செய்த பிருஹத் என்ற அரசன். இவன் தன் பதவியையும் அரசபதவியையும் தன்னுடைய எதிரிகளால் இழந்தான். பின்னர் அவன் திருநள்ளாறு பகுதிக்கு வந்து தவம் இயற்றினான். அவனுக்கு இத்தலத்தில் சிவபெருமான் காட்சியளித்து அருள் பாலித்தார்.
மன்னனின் வேண்டுகோளின்படி தளத்தில் இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மேலும் சிவபெருமான் தன்னுடைய சூலாயுதம் கொண்டு இங்கே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினார். அதில் தன் சடை முடியில் உள்ள கங்கையை கொண்டு நீரை நிரம்பச் செய்தார். அந்த குளத்திற்கு 'பிருஹத்கங்கை' என்று பெயர் பிரம்மன் தன் தொழில் நலம் பெற வேண்டி இந்த திருத்தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டுள்ளார். மேலும் தானே ஒரு சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டுள்ளார். அந்த லிங்கத்திற்கு பிரம்ம லிங்கம் என்று பெயர். இந்த லிங்கத்தை வழிபாடு செய்பவர்களுக்கு தொழிலில் மேன்மையும் நன்மையும் வந்து சேரும். அகத்தியரும் இத்தல இறைவனான மதுவனேஸ்வரரை வழிபாடு செய்துள்ளார். அகத்தியர் தனியாக பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கத்திற்கு அகத்தீஸ்வரர் என்று பெயர்.
பழங்காலத்தில் இந்த ஆலயம் திரு நன்னிலத்து பெருங்கோவில் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை கோட்செங்கச் சோழன் என்ற மன்னன் எழுப்பி உள்ளான். யானைகளால் ஏற முடியாத மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. தொடக்க கால கோவில்கள் மரத்தாலும் பின்னர் சுடுமண்ணாலும் கட்டப்பட்டன. வல்லவர் காலத்தில் கருங்கர்களால் கோவில்கள் கட்டப்பட்டன. பிற்காலச் சோழர்கள் சோழநாட்டில் பெரும்பாலான கோவில்களை கருங்கற்களால் கட்டித் திருப்பணி செய்தனர். இவர்களில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட திருக்கோவில்கள் ஏராளமான இருக்கின்றன .
ஒரு காலத்தில் சிலந்தி ஒன்று தன்னுடைய நூலினை கொண்டு சிவலிங்கத்திற்கு மேல் பகுதியில் பந்தல் அமைத்தது. அதே சிவலிங்கத்தை தினமும் வழிப்பட்டு வந்த யானை கோவிலுக்குள் இது என்ன சிலந்தி வலை என்று அதனை பிரித்து எறிந்தது. சிலந்தி வலையால் பந்தல் அமைப்பதும் யானை அதை பிரித்து எறிவதும் வாடிக்கையானது .ஒரு நாள் சிலந்தி தன் வலையை பிய்த்த யானையின் துதிக்கையில் புகுந்தது. இதனால் துன்பப்பட்ட யானை தன் துதிகையை தரையில் வேகமாக பலமுறை அடித்தது. அதில் தும்பிக்கையில் இருந்த சிலந்தி இறந்தது பலமாக தரையில் தன் துதிக்கையை அடித்துக்கொண்ட யானையும் பலியானது.
சிவபக்தியால் உயிர் துறந்த அந்த இரண்டு ஜீவன்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தார். அதன்படி யானைக்கு முக்தியை அளித்த ஈசன் சிலந்தியை சோழகுலத்தில் மன்னனாக பிறக்க செய்து பல திருக்கோவில் பணிகளை செய்ய பணித்தார். அதன்படி பிறந்தவரே கோட்செங்கச் சோழன் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் அவர் கட்டிய அனைத்து கோவில்களையும் யானைகள் ஏற்றிச் செல்ல முடியாத மாடக்கோவில்களாக அமைத்ததாகவும் சொல்கிறார்கள்.துவாபர யுகத்தில் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் விருத்திராசுரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்டனர். இந்திரனையும் பிற தேவர்களையும் தேவலோகத்தில் இருந்து விரட்டியி விருதிராசுரன் தேவலோகத்தை ஆட்சி செய்தான். அந்த அசுரனுக்கு பயந்து தேவர்கள் அனைவரும் பூமிக்கு வந்து பதுங்கி இருந்தனர்.
அந்த இடமே இயற்கை எழில் சூழ்ந்த திருநன்னிலம் திருத்தலம். இங்கு இந்திரன் முதலான அனைத்து தேவர்களும் சிவபெருமானை நினைத்து வழிபட்டு வந்தனர். அப்போது தன்னிடமிருந்து தப்பிய இந்திரனை மற்ற தேவர்கள் கண்டுபிடித்து வரும் படி தன்னுடைய அசுரப்படையை விருத்தி ராசுடன் அனுப்பினான். இதனை அறிந்த தேவர்கள் அனைவரும் தேனீக்களாக மாறி பிருஹகங்கை தீர்த்தத்திற்கு நான்கு பக்கமும் மரங்களில் உள்ள துளைகளில் சென்று ஒளிந்து கொண்டனர் .
மேலும் தேனீக்கள் உருவத்தில் இருந்தபடியே மலர்களிலிருந்து தேனை எடுத்து வந்து மதுவனேஸ்வரர் திரு உருவத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதன் காரணமாக இந்திரன் வலிமை பெற்று விருத்திராசுனை கொன்று இழந்த பதவியையும் இன்பங்களையும் மீண்டும் பெற்றான். இந்த ஆலயத்தில் கருவறையில் மதுவனேஸ்வரர் அருள் பாலிக்கிறார். அம்பாள் மதுவனநாயகி தெற்கு நோக்கி நிலையில் மதுவனேஸ்வரரை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்வதற்கு ஏராளமான பஸ் வசதி உள்ளது.