சத்தியநாராயணா பூஜை செய்வதால் ஏற்படும் ஆச்சர்ய பலன்கள் என்ன?
By : Kanaga Thooriga
நம் இந்து மரபில் பூஜைகள் என்பது வாழ்வோடு பின்னி பிணைந்த ஒன்று. எத்தனை துரிதமான வாழ்வாக இருந்தாலும் பூஜைக்கென்றே நேரம் ஒதுக்குவது நம் வழக்கம். அதிலும் குறிப்பாக சத்ய நாராயண பூஜை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. சத்யநாராயண என்பது மஹா விஷ்ணுவின் மிகவும் புகழ்பெற்ற அவதாரத்துள் ஒன்றாக கருதப்படுகிறது.
இப்பூஜையை நம்பிக்கையுடன் மற்றும் பக்தியுடன் செய்பவர்களின் சகலவிதமான கஷ்டங்களும் தடைகளும் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பூஜைகள் பக்தர்களால் செய்யப்படுகிறது என்ற போதும் உதாரணமாக, கணபதி ஹோமம், இலட்சுமி பூஜை, குபேர பூஜை போன்றவைகளின் வரிசையில் சத்தியநாராயணா பூஜை என்பது மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கிறது. ஏன் மற்ற பூஜைகளை காட்டிலும் சத்தியநாராயண பூஜை புகழ்பெற்ற ஒன்றாக திகழ்கிறது எனில் இதை மிக எளிமையாக செய்துவிடலாம்.
மற்றொன்று எந்தவித பாரபட்சமுமின்றி இளைஞர்கள், வயதானோர், ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி யாவரும் இந்த பூஜையை செய்துவிட முடியும். இந்த பூஜைக்கு தேவையாக இருப்பதெல்லாம் ஆழமான நம்பிக்கையும் முழுமையான பக்தியும் தான். ஏகாதேசி மற்றும் பெளர்ணமி ஆகிய நாட்கள் மிகவும் புனிதமானதாக கருதப்பட்டாலும் இந்த பூஜையை எந்த நாளிலும் எந்த நேரத்திலும் செய்துவிட முடியும்.
சத்திய நாராயண என்பதில் சத்தியம் என்பது உண்மையை குறிக்கிறது. யாரொருவருக்கு பூர்வ ஜென்ம பாவங்களின் மூலம் தடைகள், சங்கடங்கள் இருக்கிறதோ அவற்றை நீக்கி நன்மையை நல்குவதற்கு இந்த பூஜை உதவுகிறது. மேலும் இந்த பூஜைக்கு நம் உற்றார் உறவினர்களை நாம் அழைக்கலாம். உறவுகளில் இணக்கம் வருவதோடு, நமக்கு கிடைக்க கூடிய நல்ல ஆற்றல் மற்றவர்களுக்கும் கிடைப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தி கொடுக்கிறோம்.
இந்த பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கீர்த்தனை, பஜனை செய்வது வழக்கம். இவ்வாறு கூட்டு பிரார்த்தனை செய்வதன் மூலம் அந்த இடத்தின் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும். இந்த சத்திய நாராயண பூஜை என்பது சத்தியநாராயண கதை எனும் வரலாற்றில் இருந்து துவங்குகிறது. அதாவது உலக மக்களின் துயர் துடைக்கும் வகையில் நாரத முனி அவர்கள் மஹா விஷ்ணுவிடம் வேண்டி பெற்ற வழி இது என்பது குறிப்பிடத்தக்கது.