பாத தரிசனம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!
இறைவனின் பாதத்தை தரிசனம் செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகளும் பலன்களும்.
By : Karthiga
கோயிலுக்குச் சென்று கூட்டத்தில் இன்று கடவுளின் திரு உருவத்தை பார்க்கிறோம். கூட்டமில்லாத கோயில்களில் இறைவனின் ஒவ்வொரு அங்கங்களை கண்ணாரக் கண்டு இன்புற வாய்ப்பு இருக்கும் .கோவிந்த நாம கோஷத்திற்கு இடையில் ஜருகண்டி என்ற சத்தத்திற்கு முன் கும்பிடும் கூட்டம் நிறைந்த திருப்பதி போன்று கோயில்களில் அரை நிமிடம் கூட நிம்மதியாக கும்பிடும் வாய்ப்பு குறைவுதான்.
அப்படி இருக்கும் கோயில்களில் இறைவனின் எந்த உறுப்பை முதலில் பார்ப்பது என்றால் இறைவனின் பாதத்தை தான் பார்க்க வேண்டும். எப்போதும் இறைவன் பாதத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக மேல்நோக்கிச் சென்று முடியில் முடிக்க வேண்டும். இலக்கியத்தில் அப்படி அடி முதல் முடிவரை வர்ணித்து பாடும் இலக்கிய வகை பாதாதி கேசம் என்று பொருள் .இறைவன் இந்த உலகத்தை தாங்குகிறார். அந்த இறைவனையே தாங்குவது அவருடைய பாதங்கள். அதனால் பாதத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும் .
திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தில் இறைவனுடைய பாதத்தை தான் நல்தால், மாஅடி இறைவனடி என பாதத்தை மட்டுமே பாடுகிறார் இறைவனின் பாதகமலத்தை பற்றிக் கொண்டால் நம்முடைய பாதக மலம் அகலும் என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். கடவுள்களில் ஒவ்வொரு கடவுள்களுக்கும் கைகளின் எண்ணிக்கையும் தலைகளின் எண்ணிக்கையும் மாறுபடும்.ஆனால் பாதம் இரண்டு மட்டுமே இருக்கும். நான்கு முகம் கொண்ட பிரம்மனுக்கு எட்டு கால்களும் ஐந்து முகம் கொண்ட சிவபெருமானுக்கு 10 கால்களும் ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமானுக்கு பன்னிரு கால்களும் இருப்பதில்லை. கடவுளுக்கு கணக்கு தெரியவில்லையா என்று எண்ண வேண்டாம். கடவுளுக்கு கருணை அதிகம். இதுதான் பற்றுக்கொடி என்று பற்றிக்கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு கைகள் என்பதால் இரு கால்களுடன் அருளுகிறார் .இறைவன் எல்லாவற்றையும் தருவார் .அவரது பாதமோ இறைவனையே நமக்குத் தரும்.