மார்கழியின் அதிகாலையில் திருப்பாவை ஓதுவதால் நிகழும் அற்புதம் என்ன?
By : Kanaga Thooriga
மாதங்களில் சிறந்தது மார்கழி. பகவான் கிருஷ்ணர் கீதையில் தான் மாதங்களில் மார்கழியாக இருப்பதாக கூறுகிறார். மார்கழி மாதத்தில் இயற்கையாகவே எழும் அதிர்வுகள் ஒருவரின் ஆன்மீக செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கிறது என மூத்தோர் சொல்வதுண்டு. சிவபெருமானின் மற்றொரு ரூபமான நடராஜர் இந்த மாதத்தில் வரும் திருவாதிரை பெளர்ணமியில் தன் திவ்ய நடனத்தை ரிஷிகளுக்கு காட்டி ஆருத்ரா தரிசனத்தை அருளினார் மற்றும் இந்த மார்கழியில் விஷ்ணு பெருமானுக்கு உகந்த திருப்பாவை அன்றாடம் பாடப்படுவது வழக்கம்.
மார்கழி என்றாலே திருப்பாவை இன்றி முழுமை பெறுவது இல்லை. ஆண்டாள் அருளிய இந்த திருப்பாவை கொண்டு இறைவனை வணங்கினால், பொருள் தன்மையிலான நன்மை நிகழ்வதுண்டு ஒருவருக்கு முக்தியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆண்டாள் பூமித்தாயின் மகள். பெரியாழ்வாருக்கு ஆடி பூரம் நன்னாளில் மகளாக கிடைத்தவர். பெரியாழ்வார் ஆண்டவனுக்கு பல்லாண்டு பாடினார். அனைத்துலகையும் பல்லாண்டு வாழ வைக்கும் பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடி தன் பக்தியை வெளிப்படுத்தினார். ஆனால் ஆண்டாளோ அதற்கும் ஒரு படி மேலே சென்று இறைவனுக்கு திருப்பாவை பாடினார்.
திருப்பாவை என்பது வேதம் அனைத்திற்கு வித்து என போற்றப்படுகிறது. வேதத்தின் சாரத்தை சாமனிய மனிதருக்கும் கொண்டு சேர்த்தவள் ஆண்டாள். அப்பேற்ப்பட்ட திருப்பாவையை இறைவனுக்கு உகந்த மாதமான மார்கழியில் ஓதுவதால் ஒருவர் ஆன்மீக முக்தியையும் பெற முடியும், பொருல் தன்மையிலான முன்னேற்றத்தையும் பெற முடியும் .
30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை அதிகாலை பிரம்ம முஹூர்த்தத்தில் பாடுவது சிறப்பை தரும். கோதை நாயகி லட்சுமியின் அவதாரம் என்றாலும், இறைவனை அடைவதற்கென்று இருக்கும் வழிமுறைகளை மானுடருக்கு எடுத்த இயம்ப வந்த அவதாரம் அவர். இறைவனை எப்படி அடையலாம் என்கிற வழிமுறையை கற்று தந்தவர். அன்புக்கும் பக்திக்கும் எந்த வேறுபாடுமின்றி உட்சபட்ச அன்பையும் பக்தியையும் ஆண்டவன் மீது செலுத்துவது எப்படி என்பதை கற்றுத் தந்தார்.
தமிழ் இலக்கியத்தின் உட்சமாக அமைந்தது திருப்பாவை. அன்பின் சாரத்தை எழுத்தில் வடித்து 12 ஆழ்வார்கள் ஒற்றை பெண் ஆழ்வாராக திகழ்ந்தவர் ஆண்டாள். சூடிக்கொடுத்த சுடர்கொடி வழங்கிய இந்த திருப்பாவையை மார்கழி மாதத்தில் முழுமையான பக்தியோடும் அன்போடும் பாடுவதால் இறைவனை எளிதில் அடைய முடியும். மேலும் திருமணம் ஆகாத பெண்கள் இந்த விரதத்தை இருப்பதால் அவர்கள் மனம் விரும்பும் படியான கணவன் அமைவார்கள் என்பது ஐதீகம்.