Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டில் கறுப்பு எறும்புகள் இருந்தால் பண வரவு என்பது உண்மையா?

வீட்டில் கறுப்பு எறும்புகள் இருந்தால் பண வரவு என்பது உண்மையா?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  15 Feb 2022 6:01 AM IST

எறும்புகள் கடும் உழைப்பாளிகள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அவைகளின் திறனும், உழைப்பு நேர்த்தியும், அர்ப்பணிப்பும் மனிதர்களுக்கு கூட பாடமாக அமைகிறது எனலாம். உருவத்தில் சிறிதாக இருப்பினும் தன் வாழ்வினுக்கென்று ஒரு விதியை வகுத்து அதனை கடுமையாக பின்பற்றுகின்றன. குழுவாக சேர்ந்து உழைப்பதில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளன. அப்படிப்பட்ட இந்த எறும்புகள் நம் இல்லங்களில் சமையலறை, வரவேற்பறை போன்ற இடங்களில் சாரை சாரையாக செல்வதை நாம் கண்டிருப்போம்.

ஊர்வன, பறப்பன போன்ற ஜீவராசிகளின் நடவடிக்கைகளுக்கு பின் ஒரு சில காரண காரியங்கள் நிச்சயம் இருக்கும். மழை வருவதை அவை மயில் உணர்வதை போல, எரிமலை, வெள்ளம் போன்றவற்றின் அறிகுறியை சில பறவைகள் குறிப்பால் உணர்த்துவதை போல எறும்புகளின் வருகைக்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதன் உண்மைத்தன்மையை ஆராய்வதை காட்டிலும் அவை சொல்லும் நேர்மறையான காரணங்களை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

அதிலும் எறும்புகளில் கறுப்பு நிற எறும்புகளின் வருகை வீட்டின் ஐஸ்வர்யத்தை கூட்டும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு நல்ல காரியத்தின் அல்லது அதிர்ஷ்டத்தின் அறிகுறியை உணர்த்துவதாக கறுப்பு எறும்புகள் இருக்கின்றன.

அதை போலவே நீங்கள் அந்த எறும்புகளை எந்த இடங்களில் காண்கிறீர்களோ அதை பொறுத்தும் பலன்கள் மாறுபடும். உதாரணமாக அரிசி வைக்கும் இடத்தில் எறும்புகளை கண்டால் மிக விரைவில் பண வரவு கிடைக்க இருக்கிறது என்று அர்த்தம் என சொல்லப்படுகிறது.

ஒருவேளை எறும்புகள் வட திசையில் இருந்து வருமெனில் அவை மகிழ்வை கூட்டும் என்றும் தெற்கு திசையில் இருந்து வருமெனில் அவை தொழிலின் லாபத்தை கூட்டும். அமைதி, செல்வ வளம் இவற்றின் வருகையை உறுதி செய்யும் நல்லதிர்வாக கறுப்பு நிற எறும்புகள் கருதப்படுகின்றன.

சிவப்பு நிற எறும்பு மற்று தேனீ போன்ற பூச்சிகள் ஆரோக்கிய குறைபாடுகளை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் சில சாஸ்திர குறிப்புகளின் அடிப்படையில் சொல்லப்படுபவையே ஆகும். இதிலிருக்கும் மற்றொரு அறிவியல் அடிப்படை யாதெனில் கறுப்பு எறும்புகள் யாரையும் துன்புறுத்துவதில்லை. நாமே அதை துன்புறுத்தினாலும் அவை வேறு எதையும் துன்புறுத்தாத தன்மை கொண்டவை. இதனால் இந்த ஜீவனை ஆதரித்த பல தர்க்கங்கள் நம் வழக்கத்தில் கொண்டு வரப்பட்டது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News