சாபமும் பாவமும் போக்கும் புளியங்குடி அகத்தியர் கோவில்
புளியங்குடியில் வீற்றிருக்கும் அகத்தியர் மக்களின் சாபங்களையும் பாவங்களையும் போக்கி நல்லருள் வழங்கி வருகிறார்.
By : Karthiga
சிவபெருமானை அகத்திய முனிவர் வழிபட்ட ஆலயங்கள் எல்லாம் அகத்தீஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த ஆலயங்களில் ஈசன் மூலவராக வீற்றிருந்துருந்துஅருள் பாலிப்பார். ஆனால் அவற்றில் அகத்திய முனிவரே மூலவராக வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஆலயங்கள் அரிதாகத்தான் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் புளியங்குடி அகத்தியர் ஆலயம். இந்த ஆலயத்தின் தலபுராணம் குறித்து செவி வழியாக கூறப்பட்டு வரும் கதையை பார்க்கலாம்.
அகத்திய முனிவரின் தென்திசை பயணம் நாமெல்லாம் அறிந்ததே. அகத்தியரின் பயணம் மக்களின் நன்மைக்காக ஈசனே ஏற்பாடு செய்தது. அகத்தியரின் வருகையால் தமிழகம் அளவற்ற புண்ணிய பலன்களைப் பெற்றது. அகத்தியரால் காவிரி தோன்றி தமிழகத்தை வளப்படுத்தியது. அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூல் இயற்றி தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தார். வேளாண்மை செழிப்போடு தமிழ் மொழியும் மேலோங்கியது. எல்லா வகையிலும் மேலோங்கி இருந்த தமிழகத்தில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அகத்தியர் அறிந்து கொள்ள விரும்பினார்.
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருந்த ஒரு பகுதியில் வீட்டிலிருந்த இல்லத்தரசியிடம் "அம்மா எனக்கு பசியாக இருக்கிறது சோறு தாருங்கள் தாயே" என்று கேட்டார். அப்பெண் மணியோ "சோறெல்லாம் இல்லை. போபோ " என்று விரட்டி விட்டார். அகத்தியர் வருத்தத்துடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் மற்றொரு ஊருக்குச் சென்று ஒரு இல்லத்தரசியிடம் தாயே நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆயிற்று. ஏதாவது சோறு போடுங்கள் தாயே என்று உருக்கமாக கேட்டார் .அத்துடன் "மிகவும் அசதியாக இருக்கிறது தாயே, அதோ அந்த மரத்தடியில் இளைப்பாறூகிறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த மரத்தடிக்கு சென்று விட்டார்.
அந்த பெண்மணி அககத்தியருக்கு அரிசி உணவு வழங்க ஆசைப்பட்டார். ஆனால் வீட்டில் அரிசி இல்லை . உடனடியாக கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணத்தை விற்று அரிசி வாங்கி, அரைக்கீரையும் பலாக்காய் பொரியலும் சமைத்து எடுத்துக் கொண்டு மரத்தடிக்கு போனார். ஆனால் அங்கு அகத்தியர் இல்லை. தனது சமையலில் ஏதும் குறை உள்ளதோ என்று அந்தப் பெண் வருந்திய நிலையில் அங்கு அகத்தியர் தோன்றினார். பின்னர் உணவை சாப்பிட்டு அந்த பெண்ணுக்கு ஆசி கூறினார். தாயே தாங்கள் ஆபரணத்தை விற்று எனக்கு அம்பாள் போல் உணவு வழங்கியதால் என் வயிறு சமுத்திரம் போல் நிரம்பிற்று. இன்று முதல் இந்த ஊர் அம்பாள் சமுத்திரம் என்று புகழ்பெற்று விளங்கும்.
உங்களுக்கு அறிவும் பண்பும் ஆரோக்கியமும் நிறைந்த நீண்ட ஆயுளுடன் பெண் குழந்தை பிறக்கும். பங்குனி மாதத்தில் 10 நாள் விழா நடத்தி அன்னம் படைத்து அரைக்கீரை, பலாக்காய் பொரியல் செய்து படையலிட்டு என்னை வழிபடுங்கள் என்று கூறி மறைந்துவிட்டார். அகத்தியரின் வார்த்தையால் அந்த பெண் ஆனந்த கண்ணீர் வடித்தார். திருமணமாகி பல ஆண்டுகளாக மழலைச் செல்வம் வாய்க்காமல் இருந்த தனக்கு ஒரு மகான் இப்படி ஒரு மகத்தான வரத்தை வழங்கியதால் அவள் மகிழ்ந்தாள். அகத்தியர் வாக்குப்படியே அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர்களின் வம்சம் விருத்தி அடைந்தது. அந்த வம்சத்து பெண்கள் திருமணம் ஆகி எந்த ஊருக்கு சென்றாலும் அங்கும் அகத்தியரை வழிபட்டு வந்தனர். அந்த வகையில் புளியங்குடி நகரில் அகத்தியரின் வழிபாட்டை தொடர்ந்தனர்.
ஆரம்பத்தில் ஓலைக்குடிலாக இருந்த ஆலயம் பின்னர் கற்கோவிலாக மாறியது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பத்தாம் நாள் திருவிழா நடக்கிறது. எட்டாவது நாள் திருவிழா அன்று பரிமாறப்படும் திருமண சாப்பாடு மகத்துவம் மிகுந்தது. அன்னம் மற்றும் அரைக்கீரை பலாக்காய் பொரியலுடன் அதிகாலை 3 மணிக்கு அகத்தியருக்கு படையல் இடப்படும். இந்த படையல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவார்கள் .இந்த திருமண சாப்பாட்டை சாப்பிடுபவர்களுக்கு குடல்புண், ரத்த அழுத்தம் உட்பட உடலில் எந்த நோய் இருந்தாலும் உடனே குணமாகிவிடும் என்பது நம்பிக்கை. தென்காசியில் இருந்து புளியங்குடி செல்லும் முதன்மையான சாலையில் புளியங்குடி பஸ் நிலையத்தின் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் இந்த அகத்தியர் கோவில் அமைந்துள்ளது.