திக்கெட்டும் இன்பம் தரும் தீபாவளி! பண்டிகைகளில் தீபாவளிக்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்?
திக்கெட்டும் இன்பம் தரும் தீபாவளி! பண்டிகைகளில் தீபாவளிக்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்?
By : Thoorigai Kanaga
இந்தியா மற்றும் நேபாள் போன்ற நாடுகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பண்டிகை தீபாவளி. இந்த பண்டிகைகாக மக்கள் காத்திருப்பதை பார்க்கிற போது இதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். தீபாவளி என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இதன் பொருள் தீபங்களின் வரிசை என்பதாகும்.
நாடெங்கிலும் இந்த பண்டிகைக்கு பல பெயர்கள் உண்டு, சிலர் தந்தெராஸ் என்கிறார்கள், சிலர் தீவாளி என்கிறார்கள் ஆனால் பெரும்பாலும் இது தீபாவளி என்றே அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகைக்கு உலகெங்கிலும் பல நாடுகள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த பண்டிகையின் தனித்துவம் யாதெனில், இது இந்துக்களுக்கான பண்டிகையாக மட்டுமல்லாமல் சமயங்களை தாண்டி மக்களை ஒன்றினைக்கும் நல்லிணக்கம் சார்ந்த பண்டிகையாக இருக்கிறது. இந்த பண்டிகைக்கு என்று சமணம், புத்தம், சீக்கியர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பண்டிகை உள்ளது. இதற்கான நிறுபனமாக்க பல வரலாற்று குறிப்புகளும் உண்டு.
ராமர் வனவாசம் முடிந்து அயோதிக்கு திரும்பிய நாள், பாண்டவர்கள் வனவாசம் முடிந்து ராஜ்ஜியத்திற்கு திரும்பிய நாள், கிருஷ்ணர் நரகாசுரனை வதைத்த நாள் என பலவேறு விதமாக வரலாற்று குறிப்புகள் சொல்லப்பட்டாலும், அனைத்தும் சொல்லும் சாரம்சம் ஒன்று தான். தீமை ஒழிந்து நன்மை பிறந்த நாள் தீபாவளி. அறியாமை அகன்று ஞானம் எனும் ஒளி பிறந்த நாள் தீபாவளி, துன்பம், சோகம் அகன்று மகிழ்ச்சி புலரும் நாள் தீபாவளி.
மேலும் இந்த நாளில் மஹாலட்சுமி அவதரித்தார் எனவும் சொல்லப்படுகிறது. இதனடிப்படையில் சிலர் புது வியாபார கணக்குகளை துவங்குவதும் உண்டு. நாடெங்கிலும் பலவிதமாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். தீபமேற்றி. இனிப்புகள் பரிமாறி, புத்தாடை அணிந்து, சிலர் சூது விளையாட்டை சடங்காக விளையாடுவதும் உண்டு.
எப்படியாயினும் இந்த முறை தீபாவளி என்பது சற்று வித்தியாசமானது. வரலாற்றில் இல்லாத சவாலை மனித இனம் சந்தித்திருக்கும் வேளையில், இதனை சாமர்த்தியாக கொண்டாட்டுவது அவசியம். பாதுகாப்பு அம்சங்கள், சமூக இடைவேளி, முக கவசம் போன்ற பாதுகாப்பு உத்திகளுடன் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடுவோம்!! வளம் பெறுவோம்.