Kathir News
Begin typing your search above and press return to search.

அதிசய ரூபத்தில் அருளும் தேவராஜ பெருமாள்!

வித்தியாசமான தோற்றத்தில் அருள் பாலிக்கும் தேவராஜ பெருமாள் ஆலயத்தை பற்றி காண்போம்.

அதிசய ரூபத்தில் அருளும் தேவராஜ பெருமாள்!
X

KarthigaBy : Karthiga

  |  29 Dec 2023 4:00 AM GMT

ஸ்ரீமந்நாராயணன் பலவிதமான ரூபங்களில் பலவித திருநாமங்கள் தாங்கி உலகெங்கும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகிறார் . செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த வீராபுரம் என்ற கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் திருத்தளத்தில் எங்குமே காண இயலாத ரூபத்தில் தேவராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்து வருவது பாலரும் அறியாத ஒன்று. பச்சை பசேல் என்ற இயற்கைச் சூழலில் கிராமத்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் நமக்கு மன நிம்மதியை உடனடியாக தருவது சிறப்பு.


ஆலயத்திற்குள் நுழைந்ததும் இத்தலத்தின் பழம்பெருமையை பறைசாற்றும் விளக்கு தூண் அமைந்துள்ளது .அடுத்ததாக ஒரு சிறிய சன்னதியில் சிறிய திருவடி எழுந்தருளியுள்ளார் . உள்ளே நுழைந்ததும் மற்றும் ஒரு சிறிய சன்னதியில் பெரிய திருவடியாக கருடாழ்வார், சீனிவாச பெருமாளை தரிசித்த வண்ணம் காட்சி தருகிறார். கருவறை அர்த்தமண்டபம் என்ற அமைப்போடு திகழும் இத்தளத்தில் கருவறையில் சீனிவாச பெருமாள் நின்று திரிகோணத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.


அந்த கரங்களில் சக்கரம், சங்கு, அபய வரத ஹஸ்த நிலையிலும் காணப்படுகிறார். அருகில் அமைந்துள்ள மற்றொரு சன்னதியில் பத்மாவதி தாயார் அமர்ந்து திரிகோணத்தில் அழகுற வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சுற்றுப்புற காலத்தில் ஒரு தனி சன்னதியில் எங்குமே காண இயலாத வகையில் தேவராஜ பெருமாள் எழுந்தருளியுள்ளார். வழக்கமாக தேவராஜ பெருமாள் நான்கு கரங்களுடனும் சங்கு சக்கரத்துடனும் அபய வரத ஹஸ்த நிலையிலும் காட்சி தருவார் . ஆனால் இத்தலத்தில் அதே நான்கு கரங்களுடன் இருந்தாலும் அந்த கரங்களில் சங்கும் சக்கரமும் கமலமும் கதையும் தாங்கி அருள் பாலிக்கிறார்.


இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இத்தலத்திற்கு வந்து பத்மாவதி தாயாரையும் சீனிவாச பெருமாளையும் மனமுருக தரிசித்து வேண்டிக் கொண்டால் திருமண தடைகள் அனைத்தும் விலகி விரைவில் திருமணம் கைகூடுவதாக ஐதீகம். மேலும் மன சஞ்சலத்தை நீக்கி புத்திர பாக்கியத்தை வழங்கும் பரிகார தளமாகவும் இத்தலம் புகழ் பெற்றுள்ளது. இத்தலத்தில் வைகாசி மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று வாசன உற்சவமும் ஆவணி மாதத்தில் ஜெபமும் பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணமும் வைகுண்ட ஏகாதசி உற்சவமும் கொண்டாடப்படுகின்றது.


மேலும் நவராத்திரி உற்சவம், புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. செங்கல்பட்டில் இருந்து அமைந்தகரை மார்க்கத்தில் டி 72 என்ற நகர பேருந்து வீராபுரம் வழியாக செல்கிறது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து வீராபுரத்திற்கு ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News