எடை அதிகரித்துக் கொண்டே போகும் அதிசய கல்கருடன் எந்த கோவில் தெரியுமா?
நாச்சியார் கோவிலில் எடை கூடும் அதிசய கல் கருடன் பற்றிய தகவலை காண்போம்.
By : Karthiga
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. நாச்சியார் கோவில். இங்கு சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தளத்தில் எழுந்தருளும் வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான சீனிவாச பெருமாளையும் கவலைகள் தீர்க்கும் கல் கருட பகவானையும் வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இங்கு சீனிவாச பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் தான் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு. அதன் காரணமாகவே பெருமாள் தனக்கு சமமாக கருடனுக்கும் தனியாக சன்னதி அமைய செய்து அவரை கருடாழ்வாராக பெருமைப்படுத்தி இருக்கிறார். இவ்வாலயத்தில் உள்ள கல் கருடன் பட்சிராஜன் என்ற பெயரோடு சுமார் 5 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார் மற்றும் பெருமாள் கோவில்களில் உள்ள கருடனுக்கு இல்லாத சிறப்பு இவ்வாலயத்தில் உள்ள கருட பகவானுக்கு இருக்கிறது. இவர் 9 திருநாமங்களுடன் இவ்வாலயத்தில் அரசாட்சி செய்கிறார்.
இந்த கல்கருடன் மிகப்பெரிய வரப்பிரசாதியாக திகழ்கிறார். இவரை ஏழு வாரங்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் எந்த தடையும் இன்றி நிறைவேறும். இந்த கருடனுக்கு வியாழக்கிழமை தோறும் அமுதக்கலசம் என்ற பிரத்தியேக நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கருடனின் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கருடனுக்கு பூஜை செய்து வணங்கினால் நாக தோஷம் விளகும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
கருடன் சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டது என்பதால் 'கல்கருடன்' என்று அழைக்கிறார்கள். பங்குனி மார்கழி மாதத்தில் வெளியே கொண்டுவரப்படும் கல்கருடனை முதலில் நாலு பேர் மட்டுமே தூக்கி வருவர். பின்னர் வெளியே வர வர அவரது எடை கூடிக் கொண்டே செல்லுமாம். அதனால் கருடனை தூக்குபவர்களின் எண்ணிக்கை 8, 16, 32, 64, 128 பேர் வரை தூக்குமளவுக்கு கருடனின் எடை அதிகரிக்கும்.
பின்னர் கருட உற்சவம் முடிந்து அவரது சன்னதிக்கு கல்கருடனை தூக்கிச் செல்லும்போது 128 பேரில் இருந்து குறைந்து சன்னதிக்குள் செல்லும்போது நான்கு பேர் மட்டுமே கொண்டு சென்று இறக்கி வைப்பார்கள். இது ஆண்டுதோறும் நடைபெறும் அதிசய நிகழ்வாகும் . இந்த கருட பகவானை கருட பஞ்சமி நாளில் வழிபாடு செய்து வந்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். அதோடு சர்ப தோஷம் விஷ ஜந்துக்களால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விலகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.