Kathir News
Begin typing your search above and press return to search.

அருகம்புல் ஆனைமுகனின் விருப்பத்திற்குரிய வழிபாட்டுப் பொருளாக மாறியது எப்படி தெரியுமா?

சாதாரண அருகம்புல் ஆனைமுகனின் விருப்பத்திற்குரிய வழிபாட்டு பொருளாக மாறிய நிகழ்வை விளக்கக்கூடிய புராணக் கதை.

அருகம்புல் ஆனைமுகனின் விருப்பத்திற்குரிய வழிபாட்டுப் பொருளாக மாறியது எப்படி தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  21 March 2023 1:45 PM GMT

அது எமலோகம் எமன் வீற்றிருந்த சபையில் அனைவரும் இசைக் கருவிகளை இசைத்தும், பாடல்கள் பாடியும் நடனமாடிக் கொண்டிருந்தனர். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகிய மூவரும் இசைக்கேற்ப அற்புதமான நடனம் ஆடினர் . அவர்களின் நடனத்தை அந்த சபையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது. இதில் திலோத்தமையின் நடனம் எமனை கவர்ந்தது. அவளது அழகும்தான். அவனுக்கு காமம் தலைக்கேறியது. தன்னுடைய சபையில் பலரும் கூடி இருக்கிறார்கள் என்பதையும் மறந்து ஓடி சென்று திலோத்தமையின் கரங்களை வலுவாக பற்றினான் எமதர்மன்.

தகாத இந்த செயலால் என்ன கேடு விளையப் போகிறதோ என்று, அங்கிருந்து அனைவரும் திகைத்தனர். ரம்பையும் ஊர்வசியும் அங்கிருந்து ஓடி மறைந்தனர் .அதையெல்லாம் காணும் நிலையில் எமன் இல்லை தர்மத்தை நிலை நிறுத்தும் அவனுக்கு இப்போது காமமே தலை தூக்கி நின்றது. அதனால் திலோத்தமையின் கரங்களை மேலும் வலுவாக பற்றினான் .அவனது காமம் திரண்டு சுக்கிலமாக வெளியேறியது. அதன் மூலம் ஒரு அசுரன் தோன்றினான். அவன் வெப்பத்தால் அவன் தொட்டதெல்லாம் நெருப்பில் பொசுங்கியது .அவன் வாயிலிருந்தும் நெருப்பு வெளிப்பட்டது. இதனால் அவன் 'அனலாசுரன்' என்று அழைக்கப்பட்டான்.

தேவர்களையும் ,மக்களையும், முனிவர்களையும் தன்னுடைய வெப்பத்தால் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர் . அவர் தன் படையுடன் சென்று அனலாசுரனுடன் போரிட்டு அவனை வீழ்த்தினார் .கீழே விழுந்த அவன் மீது வருணன் சுடுமழை பொழிவித்தான் .குளிர்ச்சியான சந்திரன் அனலாசுரன் மீது தன்னுடைய குளிரான கதிர்களை பாய்ச்சினான். இதை அடுத்து விநாயக பெருமான் அனலாசுரன் அருகில் சென்றார் . அவனை சிறிய உருவமாக மாற்றிய விநாயகர் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

அப்போது விநாயகர் வயிற்றில் சூடான வெப்பம் ஏற்பட்டது. அது கடுமையான வெப்பத்தை உண்டாக்கி விநாயகரை அவதிப்படுத்தியது .சிவபெருமான் தன்னுடைய குளிர்பாணங்களை விநாயகர் மீது எய்தார். ஆனாலும் அவரது வெப்பம் தணியவில்லை. கங்கை தன்னுடைய குளிர்ச்சியான நீரால் விநாயகரை நீராட்டினாள். அதுவும் பலனளிக்கவில்லை. இறுதியாக ஒரு முனிவர் அருகம்புல்லை விநாயகரின் மீது வைத்தார் .அதன் குளிர்ச்சியால் அவருக்குள் இருந்த வெப்பம் தணிந்தது .


வெப்பத்தை தணிக்கும் பெரும் ஆற்றல் நிறைந்த இந்த அருகம்புல் விநாயகரின் முக்கியமான வழிபாட்டு பொருளாக மாறிப்போனது . இந்த அருகம்புல் மிகவும் சிறப்புக்குரியது எல்லா காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாமல் கடுமையான கோடை நிலவினாலும் கூட அருகம்புல் வளரும் . கடும் வெயிலில் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது .சிறிதளவு மழை பெய்தாலும் அருகம்புல் பசுமையாக துளிர் விட்டு வளர்ந்து விடும்.


சாதாரண புல் போன்று காட்சி தரும் இந்த அருகம்புல் அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது . குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த அருகம்புல் உடல் சூட்டை அகற்றும் . சிறுநீர் கடுத்தால் அதனை குணமாக்கும். நாள்பட்ட குடல் புண்களை ஆற்றும் .அருகம்புல் சாறு ரத்தத்தை தூய்மையாக்கும். கண் பார்வையை தெளிவாக்கும் . இப்படி பல ஆற்றல்களை கொண்ட அருகம்புல்லை தான் விநாயகர் தன்னுடைய விருப்பமான அர்ச்சனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News