28 வருடத்திற்கு ஒரு முறை பூஜை செய்யப்படும் ஜலசிவலிங்கம் - எங்கே தெரியுமா?
28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தப்பட்டு வரும் அதிசய சிவலிங்கம் நீருக்குள் இருக்கும் சிவ லிங்கத்தை பற்றி காண்போம்
By : Karthiga
புதுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நார்த்தாமலை. இங்குள்ள அறிவர் கோவிலின் மலை உச்சியில் இருக்கிறது நவால் என்ற பெயருடைய சுனை. சுமார் பத்து அடி ஆழம் கொண்ட இந்த சுனையின் அடியில் ஒரு பக்கத்தில் குடைவரை சிவலிங்கம் உள்ளது. சுனையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் தண்ணீரில் மூழ்கிய நிலையிலேயே தென்படும். மலையைக் குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த சுனையின் உள்ளே தண்ணீருக்குள் ஒரு மண்டபத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கத்திற்கு 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டு இந்த சுனையிலிருந்து நீர் முழுவதும் மின்மோட்டார் மூலம் அகற்றிவிட்டு பின்பு வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பாதாளத்தில் இருக்கும் இந்த சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த சிவலிங்கத்தின் மீது பாசி எதுவும் படியவில்லை என்பதும் அனைவருக்கும் வியப்பை அளித்திருக்கிறது. பாறை மலைகளில் எல்லாம் பாசிபடிந்து இருக்கும் நிலையில் சிவலிங்கத்தின் மீது மட்டும் பாசி இல்லாமல் இருந்தது இறையருள்தான் என்று பலரும் அதிசயத்தனர். இந்த குடைவரை சிவலிங்கத்தை 1876 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மன்னனின் மனைவி நீர் முழுவதையும் வெளியேற்றிய பிறகு வழிபட்டதாக கல்வெட்டு குறிப்புகள் எடுத்துரைக்கின்றன .
அதன் பிறகு யாரும் நார்த்தாமலை குடைவரை சிவலிங்கத்தை பார்த்து வழிபட்டதாக கல்வெட்டுகள் இல்லை. இதன் ஒரு பக்கத்தில் குடைவரை சிவலிங்கம் ஒன்று உள்ளது .இந்த குடைவரை பல்லவர்கள் அல்லது முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது