பக்தன் பெருமாளை தரிசிக்க கொடிமரம் விலகி நின்ற அதிசய கோவில் எது தெரியுமா?
திருக்குறுங்குடியில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்ய பக்தனுக்காக விலகி நின்ற கொடிமரம் அமைந்துள்ளது.
By : Karthiga
திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திர கிரி மலை அடிவாரத்தில் தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த நம் பாடுவான் என்ற பெயருடையவர் வாழ்ந்து வந்தார். எந்நேரமும் நம்பியை பாடியதால் நம்பியை பாடுவான் என்ற பெயர் பெற்று அதுவே மருகி 'நம் பாடுவான்' என்றானது. அவருக்கு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க அந்த காலத்தில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது .வெளியே நின்று நம்பியை நினைத்து மனமுருகி கைசிகப்பா இசைத்து பாடல்களைப் பாடுவார்.
பெருமாள் மகிழ்வோடு அவரது இசையை கேட்பார். நம் பாடுவான் எல்லா ஏகாதசி அன்றும் நோன்பு இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். வெளியில் இருந்து இறைவனை தரிசிக்கும் நம் பாடுவான் இதுவரை மூலவரை பார்த்ததே இல்லை. ஏனென்றால் நடு நாயகமாக இருக்கும் கொடிமரம் மூலவரை மறைத்தபடி இருக்கும். ஒரு கார்த்திகை ஏகாதசி அன்று நம் பாடுவன் பெருமாளை தரிசிப்பதற்காக வந்து கொண்டிருந்தார்.
வழியில் அரக்கன் ஒருவன் நம் பாடுவானை வழிமறித்து ஆகாரமாக கொள்ள நினைத்தான். இதை அறிந்த நம் பாடுவான் என்னை தர தயார் ஆனால் பெருமாளை சேவித்து வர அனுமதிக்க வேண்டும் என்று கேட்க அரக்கனும் சம்மதித்தான் . நம்பாடுவான் கோவிலுக்கு சென்று பெருமாளின் புகழை கைசிகப் பண்ணிசைத்து பாடினார் . ஆனால் அன்றவன் மனம் வழக்கம் போல் மகிழ்ச்சியாக இல்லை.
இன்றுடன் வாழ்க்கை முடிய போகிறது. இந்த நிமிடம் வரை பெருமாளை பார்க்க முடியவில்லை. கொடிமரம் மறைக்கிறதே என்று வருத்தத்தோடு பாடினார் .அவரது வருத்தத்தை அறிந்த பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க செய்து நம் பாடுவானுக்கு தரிசனம் கொடுத்தார். இந்த ஆலயத்தில் கொடிமரம் விலகி இருப்பதை இன்றும் காணலாம். பெருமானை தரிசித்த மகிழ்ச்சியில் சொன்னபடி அரக்கனை தேடி வந்தார் நம் பாடுவான்.
அப்போது பெருமாள் ஒரு வயதான அந்தணர் வடிவில் வந்து அவனை தப்பித்துப் போகும் படி கூறினார். ஆனால் அதனை நம்பாடுவான் ஏற்றுக்கொள்ளவில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக அரக்கன் முன்பாக போய் நின்றார். ஆனால் அரக்கனோ தற்போது எனக்கு பசி இல்லை என்று கூறிவிட்டான் . உடனே நாம்பாடுவான்' உனக்கு இந்த கதி எதனால் வந்தது ?'என்று கேட்டார். அதற்கு அரக்கன் நான் யாகங்களை கேலி செய்தேன். அதனால் ஒரு ரிஷி தன்னை அரக்கனாகும்படி சபித்து விட்டார் என்றான்.
மேலும் என்னுடைய சாபம் நீங்க வேண்டுமானால் ஏகாதசி விரத பலனில் கால் பங்காவது கிடைக்க வேண்டும் என்று சொன்னான் . இதைக்கேட்டு நம் பாடுவான் மகிழ்ச்சி அடைந்து அப்படி ஒரு பலன் என்னிடம் இருந்தால் அதைப்பற்றி நீ சுய உருவை அடைவாய் என்றார் .இதை அடுத்து அரசனாக இருந்தவன் மனித உருவம் பெற்று மோட்சம் அடைந்தான்.
இந்த நம்பாடுவான் கதையானது கை சிகப்புராணமாக வராக மூர்த்தியே தன் மடியில் இருத்தி இருந்த பூதேவி பிராட்டிக்கு உரைத்த பெருமை கொண்டது .இன்றும் கார்த்திகை மாதம் சுக்கிலபட்ச ஏகாதசி என்று எல்லா வைணவ தளங்களிலும் கைசிகப்புராணம் வாசிக்கப்படுகிறது. இதை பாடினாலோ அல்லது கேட்டாலோ மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.