பூவுலகுக்கே குருவாகத் திகழ்ந்த காஞ்சி மகானை அடையாளம் காட்டிய திருத்தலம் எது தெரியுமா?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் பிரம்மதேசம் அருகே உள்ளது பெருமுக்கல் என்ற கிராமம்.
By : Karthiga
பெருமுக்கல் என்ற கிராமத்தில் அருள்பாலித்து வருகிறார் முக்தியாஜல ஈஸ்வரர். முக்தியாஜல ஈஸ்வரர் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 650 படிக்கட்டுகள் உள்ளன. இவற்றை கடந்துதான் மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியும் . அதேபோல் கோவிலின் பின்பகுதியிலும் படிக்கட்டுகள் உள்ளன.
அதாவது முன் பகுதி வழியாக சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே செல்ல வேண்டும் என்பது ஐதீகம் முன்பு இருந்தது .ஆனால் தற்போது பின்பக்க படிக்கட்டுகளை யாரும் அதிகளவில் பயன்படுத்துவதில்லை என கூறப்படுகிறது. ராமாயணத்தை எழுதிய வால்மீக மகரிஷி இம்மலையில் ஈசனை நினைத்து நீண்ட காலம் தவம் இருந்து அவரது பேரருளை பெற்றுள்ளார் .
அவர் தவமிருந்த இடம் வால்மீகி குகை என்று வணங்கப்படுகிறது. மேலும் மலையின் மீது கோடை காலங்களில் வற்றாத இரண்டு அழகிய சுனைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது. இக்கோவிலுக்கு கூடுதல் சிறப்பாக கடந்த 1906 ஆம் -ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 66-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரர் பெருமுக்கல் மலையில் உள்ள முக்தியா ஜல ஈஸ்வரர் சன்னதியில் சாதுர் மாஸ்ய விரதம் இருந்தார் .
அப்போது தனது தந்தையுடன் காஞ்சி மடாதிபதியை தரிசனம் செய்வதற்காக சாமிநாதன் என்ற சிறுவனும் வந்தான். அவனது பக்தியையும் ஞானத்தையும் கண்ட வியந்த பீடாதிபதி சிறிது காலத்துக்கு பின்னர் அவரை காஞ்சி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக நியமித்தார். அந்த சாமிநாதனே கலியுகத்தில் சிவ ஸ்வரூபமாக நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆவார் .
தன்னுடைய தல வலிமையால் பூவுலகுக்கே குருவாக திகழ்ந்த காஞ்சி மகானை அடையாளம் காட்டுவதற்கு காரணமாக அமைந்த புண்ணிய பூமி பெருமுக்கல் திருத்தலமாகும். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க முக்தியாஜல ஈஸ்வரர் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. திண்டிவனத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் மரக்காணத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.