முருகப்பெருமானை தமிழ் கடவுளாக வணங்குகிறோம் எதனால் தெரியுமா?
முருகன் என்றாலே தனிச்சிறப்பும் அழகும் நிறைந்த கடவுள் என்பது பொருள். முருகப் பெருமானை தமிழ் கடவுளாக வணங்குவதற்கான காரணங்கள் பற்றி காணோம்.
By : Karthiga
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் முதல்திணையான குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.
தமிழர்கள் மலைப்பகுதியை அதாவது இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தனர். இயற்கை என்றால் மரம், செடி, கொடி, அதில் உள்ள விலங்குகளையும் வணங்கி வாழ்ந்து வந்தனர்.அப்படி உலகத்தில் தோன்றிய மக்கள் முதலில் மலையில் ஒரு வகை வழிபாட்டை தொடங்கினார்கள். முருகு என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். மக்கள் அழகை உபசித்த ஒருவகை வழிபாடு முருக வழிபாடு. எனவேதான் முருகப்பெருமான் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.
திருப்புகழில் அருணகிரினாதர், “முழுதும் அழகிய குமரன்” என எதையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அழகுடன் இருப்பவர் முருகன் என பாடியுள்ளார். அழகெல்லாம் ஒன்றாக சேர்ந்தால் அதற்கு பெயர் தான் முருகு. திருமுருகாற்றுப்படை தனித்த ஒரு சிறப்புடைய இலக்கியம்.தமிழில் கிடைத்திருக்கும் மிக பழைய நூல்கள் என்றால் அது சங்க இலக்கியங்கள் ஆகும். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்கணக்கு என மூன்று பகுதிகளாக உள்ளன. அதில் பத்துப்பாடு முதல் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அதிலும் முதலாவதாக திருமுருகாற்றுப்படை உள்ளது.
திருமுருகாற்றுப்படை எழுந்ததற்கான காரணம்:
தமிழில் அருமையான புலவர்களில் ஒருவர் நக்கீரர். அவர் திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரை அமர்ந்து சிவ வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அந்த வழிபாட்டு நேரத்தில் மரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுகிறது. அந்த இலையின் பாதி நீரிலும், மற்றொரு பாதி நிலத்திலும் விழுகிறது. நீரில் விழுந்த பகுதி மீனானது. நிலத்தில் விழுந்த மற்றொரு பாதி தவளை ஆனது. மீன் நீரிலும், தவளை நிலத்திற்கும் அதன் மீதி பகுதியை இழுக்கத் தொடங்கியது.
சிவ பூஜையிலிருந்து கவனம் தவறிய நக்கீரர் இதைப்பார்த்து அதில் கவனம் செலுத்தினார். அங்கு தோன்றிய பூதம் நக்கீரரை பிடித்து ஒரு குகையில் அடைத்தது. பூஜையில் கவனம் சிதறியவர்களை பிடித்து குகையில் அடைத்து 1000 பேர் ஆனதும் அவர்களை உண்பது தான் அந்த பூதத்தின் திட்டம். அங்கு ஏற்கனவே பலரை அடைத்து வைத்திருந்தது அந்த பூதம்.குகையில் அடைப்பட்ட நக்கீரர் தன்னை விடுவிக்குமாறு முருகனை நோக்கி பாடினார். அது தான் திருமுருகாற்றுப்படை. அப்படி வேண்டிய மாத்திரத்தில், முருகனின் வேல் புறப்பட்டு வந்து குகையை கிழித்து அங்கிருந்தவர்களை காப்பாற்றியது என்ற குறிப்பு உண்டு. இப்படியாக தமிழ் இலக்கியங்களும் முருகனைப் பற்றி பாடுவதாக அமைந்திருப்பதால் முருகப்பெருமான் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.