ஆயுளை நீட்டிக்கும் அரும்பாக்கம் ஈசன்!
அரக்கோணத்தை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அனுபமஸ்தினி அம்பிகை சமேத தேவாதி ராஜீஸ்வரர் கோவில் உள்ளது.
By : Karthiga
தேவர்களின் தலைவனான இந்திரன் தான் இழந்த இந்திர பதவியை இங்குள்ள ஈசனை வழிபட்டு மீண்டும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் தன்னுடைய ஆயுள் விருத்திக்காகவும் இந்திரனின் இத்தல சிவபெருமானை வழிபாடு செய்துள்ளார். இதனால் இந்த ஆலயம் நீண்ட ஆயுளுக்காகவும் வழிபடும் திருத்தலங்களில் முக்கியமானதாக திகழ்கிறது .
திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் செய்து கொள்வதைப் போல இங்கும் சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி ஆயுள் விருத்தி ஹோமம் போன்றவை செய்யப்படுகிறது . இது தவிர பெண்களின் கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளை அகற்றுவதற்குரிய பரிகாரம் செய்யும் கோவிலாகவும் வேலையில் பதிவு உயர்வு பெற்றுத்தரும் ஆலயமாகும் இது விளங்குகிறது.
மகாவிஷ்ணுவின் கழுத்தில் இருந்து பெறப்பட்ட மாலையை துர்வாச முனிவர் வழியில் தென்பட்ட இந்திரனுக்கு கொடுத்தார். மாலையை பெற்றுக் கொண்ட இந்திரன் அதை தன்னுடைய வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை மீது வைத்தான். அந்த யானை துதிக்கையால் தூக்கி காலில் போட்டு மிதித்தது .இதைக் கண்ட துர்வாச முனிவர் இந்திரனின் தலைமை பதவி பறி போகும்படி சாபம் விட்டார். அந்த சாபம் நீங்க இந்திரன் பல ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு பலன் இல்லை. இறுதியாக இத்தலம் வந்த இந்திரன் இங்குள்ள தேவாதி ராஜீஸ்வரரை வணங்கினார்.
கோவிலுக்கு வெளிப்புறத்தில் சிறிய குளம்வெட்டி தீர்த்தம் உருவாக்கினான். அந்த தீர்த்தத்தை கொண்டு இறைவனை அபிஷேகித்து வழிபட்டான். மேலும் கோவிலுக்குள் அகழி ஏற்படுத்திய அதில் நீர் நிரப்பி அகழியில் தாமரை கொடிகளை படர விட்டு அதில் பூத்த தாமரை மலர்களைக் கொண்டு இறைவனை பூஜித்தார். இதை அடுத்து இந்திரனின் சாபத்தை நீக்கியும் நீண்ட ஆயுளை வழங்கியும் இத்தல ஈசன் அருளினார் .
அரக்கோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அரும்பாக்கம் கிராமம். இக்கோவிலுக்கு செல்ல நேரடியாக பேருந்து வசதி இல்லை. அரக்கோணத்தில் இருந்து பனப்பாக்கம் வழியாக வேலூர் செல்லும் நாகவேடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள கோவிலுக்கு ஷேர் ஆட்டோ மூலமாக செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்ல தனியாக கார் வேன் மூலமாக வரலாம்.