சம்பந்தரின் திருமணத்தில் அனைவருக்கும் முக்தி கிட்டிய ஆச்சர்ய தலம்!
ஆச்சாள்புரம் சிவலோகதியாகர் திருக்கோவில்
By : Kanaga Thooriga
ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோவில் மயிலாடுதுறையில் உள்ள ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். இங்கிருக்கும் மூலவருக்கு சிவலோகதியாகர் என்பதும், அம்பாளுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்பதும் திருப்பெயராகும்.
தேவாரம் பாடல் பெற்றா திருத்தலங்களுள் இத்தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் தான் ஞானசம்பந்தர் இறைவனுடன் இரண்டாற கலந்தார் என்பது நம்பிக்கை. இந்த திருக்கோவிலுக்கு பெருமனம் சிவலோகபுரம், முக்திபுரம், திருமண நல்லூர் போன்ற வரலாற்று பெயர்களும் உண்டு. குறிப்பாக முக்தி புரம் என்ற பெயர் ஏற்பட காரணம், இக்கோவிலில் சம்பந்தர் உட்பட திருநிலகண்ட யாழ்பாணர், மாதங்க சூடாமணி, முருக நாயனார் உள்ளிட்டவர்கள் முக்தி அடைந்துள்ளனர் என்பது தொன் நம்பிக்கை.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாக இக்கோவிலில் திருஞானசம்பந்தர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார். காரணம், இத்தலத்தில் தான் அவருடைய திருமணம் நடைபெற்றது என்றும் அதற்கடுத்த நாளே அவர் முக்தி அடைந்தார் என்பதும் ஆச்சர்யகரமான உண்மை.
இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்களால் புணரமைக்கப்பட்டதன் குறிப்புகளை இக்கோவிலில் காணமுடிகிறது. இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணம் யாதெனில், சீர்காழியில் சிவபாத இருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். அவருக்கு 16 வயது ஆன போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலில் நிச்சயக்கப்பட்ட பெண் திடீரென இறந்து போகவே, அவளை பதிகம் பாடி மீட்ட சம்பந்தர், மீண்டும் உயிர் கொடுத்ததால் அப்பெண்ணை தன் மகளாக ஏற்றார்.
அதற்கு பின் தன் மகனுக்கு இரண்டாவதாக மற்றொரு பெண்ணை நிச்சயத்தார் சிவபாத இருதயர். இவர்களின் திருமணம் ஆச்சாள்புரத்தில் நடந்தது. அப்போது திருமண நேரம் நெருங்குகையில் "இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்" என நினைந்து உருகி சிவனை வேண்டி தன்னுடைய கடைசி பதிகமாம் "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" எனும் பதிகம் பாட சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சி தந்து சம்பந்தரோடு சேர்ந்து அந்த திருமண சடங்கில் பங்கேற்ற அனைவரும் முக்தி அடைக என்று அருள் வழங்கவே அனைவரும் முக்தி அடைந்தனர். இந்த ஆச்சர்யம் நிகழ்ந்தாலேயே இந்த தலத்திற்கு ஆச்சர்ய புரம் என்றும்.
இத்திருமணத்தில் அம்பாள் அனைவருக்கும் திருநீறு வழங்கியதால் இங்குள்ள அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என பெயர். இன்றும் அம்பாள் சந்நிதியில் திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த திருமண காட்சியை விளக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் இக்காட்சி விளக்கும் விதமாக திருவிழா கொண்டாடப்படுகிறது.