ஆதி சிதம்பரம் என்றழைக்கப்படும் ஆச்சர்ய திருத்தலம். பிறவி பிணி தீருமிடம்
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு
By : Kanaga Thooriga
சுவேதாரண்யேஸ்வரர் கோவில் சைவத்தில் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட தலமாகும். தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவபெருமான் சுவேதாரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் மற்றும் இங்குள்ள அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். தேவாரம் பாடல் பெற்ற தலங்களுள் இது ஒன்றாகும். மேலும் இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு யாதெனில் நவகிரக தலங்களுள் இது ஒன்றாக திகழ்கிறது குறிப்பாக புதனுக்குரிய தலம் இது.
கிட்டதட்ட இரண்டு ஏக்கரில் அமைதுள்ள இந்த கோவில் வளாகத்தில் ஏழு அடுக்கு கோபுரம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஏராளமான சந்நிதிகள் அமைந்துள்ளன. சித்ரா பெளர்ணமி மற்றும் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் இந்த இரண்டு விழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதாகும்.
இக்கோவிலின் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில் முன்னொரு காலத்தில் மருத்துவ அசுரன் என்று ஓர் அரக்கன் இருந்தான் அவன் பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுக்கு கிடைத்த அருளால், அவன் தன் சக்திகளை தவறாக பயன்படுத்தினான். குறிப்பாக ரிடப தேவர் என்பவரை காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் சென்று மன்றாடினார். இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் ரூபங்களில் ஒன்றான அகோர ரூபத்தை காட்டினார். அந்த கோலத்தை கண்ட மாத்திரத்திலேயே சரணாகதி அடைந்தான் அசுரன். இந்த இடத்திற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. சுவேதாரண்யம், நவ நிர்தய ஸ்தலம், மற்றும் இக்கோவிலை ஆதி சிதம்பரம் என்று அழைக்கும் பழக்கமும் உண்டு. காரணம் இங்கு தான் சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்களை நிகழ்த்தினார் என்பது வரலாறு
இக்கோவில் புதனுக்குரிய தலமாக அறியப்படுகிறது. இந்திரனின் ஐராவதம் எனும் வெள்ளை யானை இறைவனை வழங்கிய தலம் இது என்பது நம்பிக்கை. ஞாயிற்று கிழமைகளில் இங்குள்ள அகோரமூர்த்தி (வீரபத்திரர்) வணங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும். தேவாரம் பாடப்பெற்ற சிவதலங்களுள் காவேரி வடகரைத் கோவில்களில் இது 11 ஆவது தலமாகும். இக்கோவிலில் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இதன் ஆரம்ப கால கட்டமைப்புகள் சோழர்களால் கட்டபெற்றது. தற்சமயம் இருக்கும் கோவில் விஜயநகர பேரரசால் கட்டப்பெற்றது.
தஞ்சையிலிருந்து 95 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இக்கோவில் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு கிராமத்தில் அமைந்துள்ளது.