அற்புத கோலம்! அம்மையப்பன் அர்த்தநாரீஸ்வரராய் காட்சி தரும் அதிசய தலம்!
By : Kanaga Thooriga
இந்து கோவில்களில் மிக பழமையான ஆலயம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். தமிழகத்தில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. சிவ பாதி உமையாள் பாதியாக அர்த்தநாரி கோலத்தில் அம்மையப்பன் அருள்வழங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரை மாதொருபாகன் என்று அழைப்பது வழக்கம். இதே மலையில் தான் மிகவும் புகழ்பெற்ற செங்கோட்டு வேலவர் ஆலயமும் அமைந்துள்ளது.
இக்கோவிலின் பிரசித்தி பெற்ற மற்றொரு பெயர் யாதெனில், திருக்கொடிமாடச் செங்குன்றுர் என்பதாகும். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஓன்றாகும். இங்கே திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் சிலப்பதிகாரத்தில் இந்த பகுதி நெடுவேல் காடு எனும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் மிகவும் புகழ்பெற்று இருப்பதை போலவே, இசையிலும் இத்தலம் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.
முத்துசாமி தீக்ஷிதரின் மிகவும் பிரபலமான இசையமைப்பான குமுதக்கிரியா எனும் ராகத்தில் அமைந்த அர்த்தாநாரீஸ்வரம் எனும் பாடல் இத்தலத்தை குறிப்பதே ஆகும். சோழ, பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களால் முக்கியமான புணரமைப்புகள் இக்கோவில் நிகழ்ந்துள்ளன.
இக்கோவில் குறித்து சுவரஸ்யமாக சொல்லப்படும் வரலாறு யாதெனில் ஒரு முறை ஆதிசேஷனும் வாயுவும் யார் பலமிக்கவர் என சண்டையிட்டு கொண்டனர். பந்தையத்தின் படி ஆதிசேஷன் தன் படத்தால் மேரு மலையை இருக பிடிக்க வேண்டும். வாயு அந்த பிடியில் இருந்து மலையை விடுவிக்க வேண்டும். இந்த பந்தையின் போது வாயு வீசிய பெருங்காற்றில் மலையின் முகடு பூமியின் பல்வேறு இடங்களில் சென்று விழுந்ததாகவும் அதில் ஒன்று தான் இது என்றும். மேலும் பந்தையத்தின் போது ஆதிசேஷனின் இரத்தம் மலையெங்கும் கசிந்து செந்நிறமாக வழிந்தது அதனாலேயே செங்கோடு என்றும் அதுவே திருச்செங்கோடு என்று ஆனதாகவும் வரலாறு. மலையில் 60 அடியில் பாம்பின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது அதனாலேயே இது நாகமலை என்றும் அழைக்கப்படுகிறது. சம்பந்தர் இங்கு தான் திருநீலகண்டபதிகம் பாடினார்.
650 அடி உயரத்தில் இம்மலை அமைந்துள்ளது ஒருவர் இம்மலையை அடைய 1156 படிகள் ஏறவேண்டும். தற்சமயம் மலையை அடைய சாலை வழி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து மரபில் மிக முக்கியமானதாக கருதப்படும் 108 தீர்த்தங்களில் முக்கியமானது அம்மையப்பர் தீர்த்தம். இது இங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரின் பாதம் கீழே அமைந்துள்ளது.