சகலமும் அருளும் சக்ரதாரி பிரிந்தவர்களை இணைக்கும் ஆச்சர்ய திருக்கோவில்
அருள்மிகு அஷ்டபுஜ பெருமாள் கோவில்
By : Kanaga Thooriga
அஷ்டபுஜகாரம் அல்லது அஷ்டபுஜ பெருமாள் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திராவிட கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்பெற்ற இந்த கோவில் தேவார திவ்யபிரபந்தம் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும் அதாவது மங்களாசனம் பெற்ற கோவில்களுள் ஒன்று எனலாம். அதுமட்டுமின்றி விஷ்ணு பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்று. இங்கு இருக்கும் இலட்சுமி அம்பாளுக்கு அலமேலுமங்கை என்பது திருப்பெயராகும்.
இக்கோவில் பல்லவ மன்னர்கள், மத்திம கால சோழர்கள் மற்றும் விஜயநகர அரசர்களால் புணரமைக்கபட்டது என சொல்லப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்க்கிற போது அதில் சில குலோதுங்க சோழர் காலத்தை சேர்ந்தது எனவும் மற்றவை ராஜேந்திர சோழனின் காலத்தை சேர்ந்தது எனவும் சொல்லப்படுகிறது.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், வேறு சில காரணங்களுக்காக பிரம்ம தேவர் சரஸ்வதியை பிரிய நேரிட்டது. அப்போது பிரம்ம தேவர் உலக நன்மைக்காக அஸ்வமேத யாகத்தை நிகழ்த்தினார். இந்த யாகமானது தம்பதியினராக செய்ய வேண்டிய யாகமாகும். சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்ம தேவர் செய்ய துணிந்ததால் அந்த யாகத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் சரஸ்வதி. வரும் தடைகளிலிருந்து தனை காக்க வேண்டும் என பிரம்ம தேவர் விஷ்ணு தேவனிடம் அபயம் பெறவே, விஷ்ணு பெருமான் பல வழிகளிலும் அந்த யாகத்தை காத்து வந்தார். மிகுந்த சினமுற்ற சரஸ்வதி தேவி, சரஸ்பேஸ்வரன் எனும் கொடிய நாகத்தை ஏவினார். அந்த நாகத்தை அழிப்பதற்கு எட்டு கைகளுடன் அஷ்டபுஜ பெருமாளாக தோன்றி அந்த நாகத்தை அழித்து காத்தார் என்பதால் இவருக்கு அஷ்டபுஜ பெருமாள் என்பது திருப்பெயரானது.
பகவானின் எட்டு திருக்கரங்களில், வலது புறத்திலுள்ள நான்கு கரத்தில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும், இடது புறத்திலுள்ள நான்கு கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகிய ஆயுதங்களும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இக்கோவிலின் வாயு மூலையில் யாக சாலை அருகே இன்றும் சர்பேஸ்வரனை காணலாம்.
இக்கோவிலின் மூலவருக்கு ஆதிகேசவ பெருமாள், கஜேந்திர வரதன் மற்றும் சக்ரதாரி என பல்வேறு பெயர்கள் உண்டு.
இக்கோவிலில் இருக்கும் தேவிக்கு தனியாக மங்களாசனம் செய்யப்பட்டிருப்பது இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.