தெய்வ அனுகிரஹம் இருந்தால் ஜோதிடத்தை வெல்ல முடியுமா? மஹாபாரதம் காட்டும் உண்மை
By : G Pradeep
பஞ்ச பாண்டவர்களின் தந்தையான பாண்டு. தான் இறந்த பின் தன்னுடைய உடலை பிள்ளைகளில் யார் உண்டாலும் அவர்களுக்கு இந்த உலகில் கிடைத்தற்கரிய ஞானம் ஒன்று கிடைக்குமென்று கூறியிருந்தார். ஆனால் இறந்த பின்பு தந்தையின் உடலை உண்பதென்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது மற்றும் அந்த துணிவும் யாருக்கும் வரவில்லை. எனவே யாரும் அதை முயன்று பார்க்கவில்லை. இச்சூழலில், நால்வரில் சகாதேவன் மட்டும் இதை முயன்று பார்ப்பது என்று முடிவு செய்து, தந்தை இறந்த பின் அவர் உடலின் ஓரு சிறு பகுதியை கடித்து உண்டதாக கதைகள் உள்ளன. அவருடைய உடலின் முதல் துண்டை உண்ட போது இந்த பிரபஞ்சத்தில் நடந்து முடிந்த அனைத்தையும் கணிக்கக்கூடிய ஆற்றல் அவருக்கு கிடைத்ததாகவும். இரண்டாம் முறை உண்ட போது, தற்சமயம் என்ன நடக்கிறது என்பதை கணிக்கும் ஆற்றல் கிடைத்ததாகவும் . மூன்றாம் முறை உண்ட போது, வருங்காலத்தில் என்ன நடக்கயிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஞானம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
எனவே இந்த ஞானத்தை பெற்ற பின்பு, சகாதேவன் அந்த வரத்தை பரிசோதிக்க முயன்ற போது. இதனால் விளையவிருக்கும் ஆபத்தை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா. சகாதேவனிடம் சென்று, "உனக்கு கிடைத்திருக்கும் ஆற்றல் அளப்பரியாதது ஆனால் அவற்றை பரிசோதிக்க நீ துவங்கினால் அது ஆன்மீக ரீதியில் உனக்கு தீய கர்ம வினைகளையே கொண்டு சேர்க்கும். எனவே இடமறிந்து நடந்து கொள். உனக்கு தெரிவதை அனைவருடனும் தேவையின்றி பகிராதே " என எடுத்துரைத்தார்.
சகாதேவன் இயல்பிலேயே ஜோதிடத்தில் பெரும் ஞானம் பெற்றவன் . ஜோதிடத்தில் அவன் திறமைசாலி என்பதை அறிந்தே, சகுனி, துரியோதனனிடம், எதிரி என்றும் பாராமல் சகாதேவனிடம் சென்று பாரதப்போருக்கு நாளும், முஹூர்த்தமும் குறிக்க சொன்னார்.
முற்றும் உணர்ந்த சகாதேவனுக்கு இந்த போர் நிகழ்ந்தால் அது பெரும் சமூக சுத்திகரிப்பை ஏற்படுத்த உள்ளது என்பது தெரிந்திருந்தது. போர் நிகழும் வேளையில் வெற்றி யாருக்கு என்பதை அவன் அறிந்திருந்தான் . ஆனால் கண்ணனின் அறிவுருத்தலின் படி அதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் வைத்திருந்தான் . இவ்வேளையில் சகாதேவனிடம் போருக்கான முஹூர்த்தம் குறிக்க துரியோதனன் வந்திருந்த போது, தனக்கு வருங்காலத்தை குறித்து அறிந்து கொள்ளும் திறன் மூலம் போரில் வெல்ல போவது தான் சார்ந்திருக்கும் பாண்டவர் அணி தான் என்பதை சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் நிலவியது. ஆனால் அவன் இன்னும் துரியோதனனுக்கான ஜாதக கணிப்பை காணத்துவங்கியிருக்கவில்லை. இச்சூழலில் கிருஷ்ணனிடம் சென்று கேட்டான் "எனக்கு என் அகக்கண்ணில் நன்றாக தெரிகிறது பாண்டவர்கள் ஆகிய நாங்கள் வெல்ல போகிறோம் என்று. ஆனால், என்னிடம் வெற்றி பெறுவதற்கான முஹூர்த்தம் குறிக்க துரியோதனன் வந்துள்ளான், அவனுடைய ஜாதக கணிப்பை நான் இன்னும் பார்க்க துவங்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தின் படி நான் பொய்யுரைக்க ஆகாது. அவனிடம் தற்சமயம் வெல்ல போவது நாங்கள் தான் என உரைக்கவா வேண்டாமா? " என வினவினான்.
கிருஷ்ணன் சொன்னார், "சகாதேவா, பாண்டவர்கள் போரில் வெல்வார்கள் என்பது உனக்கு கிடைத்திருக்கும் ஞானத்தால் நீ அறிந்ததே தவிர . அவன் ஜாதக கட்டத்தில் எது உள்ளதோ அதை நீ தாரளாமாக உரைக்கலாம் என்றான். "குழப்பமடைந்த சகாதேவன் துரியோதனனின் ஜாதக கணிதத்தை கணக்கிட்டு பார்த்த போது, ஜாதக கட்டங்களின் கணிதப்படி வெல்லப்போவது கெளரவர்கள் என்பதே விதியாக இருந்தது " அப்போது தான் சகாதேவன் உணர்ந்தான், தீயவர்கள் வெல்ல வேண்டும் என்பது விதியாக இருந்தாலும், நன்மையை வெற்றிகொள்ள செய்ய பராத்மாவான கிருஷ்ணனால் முடியும் என்று.