அபிஷேகத்திற்கு காளைகள் நீர் கொண்டு செல்லும் அதிசய திருத்தலம்! சென்னிமலை!
By : Kanaga Thooriga
கைத்தறி நகரம் என்று பெயர் பெற்ற தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது சென்னிமலை. ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் எனும் கிராமம் அமைந்துள்ளது. மிகவும் பாரம்பரியமிக்க இடமாக இது கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களில் குறிப்பாக பதிற்றுபத்தில் இந்த இடம் கொடுமணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தின் புராதன மதிப்பு கருதி இவ்விடம் மாநில தொல்லியல் துறையின் வசம் உள்ளது. நொய்யல் ஆற்றங்கரையில் இந்த இடம் அமைந்துள்ளது. நொய்யலை காஞ்சி மாநதி என்றழைப்பதும் உண்டு.
இங்கு சென்னிமலையில் முருக பெருமான் அருள் பாலிக்கிறார். கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த மலை. தேவனகிரியில் இந்த மலையை சிரகிரி மற்றும் சென்னியங்கிரி என்று அழைக்கின்றனர். நம் தமிழகத்தில் இந்த இடத்தை சென்னிமலை என்று அழைப்பது வழக்கம். இந்த மலையை புஷ்பகிரி மற்றும் சிகரகிரி என்றும் அழைக்கின்றனர். இந்த மலைக்கு கீழே அமைந்திருக்கும் நகரையே சென்னிமலை என்கின்றனர்.
கிழக்கு அமைந்துள்ள கோவிலின் முகப்பில் விநாயகர் சந்ந்தி அமைந்துள்ளது. சித்த யோகத்தின் 18 சித்தர்களுள் முக்கியமானவரான புண்ணாக்கு சித்தர் குகை இங்கே அமைந்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய் கிழமை மாலையும் இங்கே நிகழும் ரத ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். முருகனின் துணையான வள்ளியும் தெய்வானையும் இங்கே அமிர்த்தவள்ளி மற்றும் சுந்தரவள்ளி எனும் பெயரில் முருகனை அடைய தவம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு மட்டுமின்றி வள்ளி, தெய்வானைக்கும் தனித்தனியே சந்நிதிகள் இருப்பது தனிச்சிறப்பாகும்.
தை மாதத்தில் நிகழும் தேர் திருவிழாவிற்கு இங்கே பக்தர்கள் வெள்ளம் திரள்வதை கண்கூடாக காண முடியும். அதுமட்டுமின்றி மாட்டு வண்டி மலையேறும் அதிசயத்தை இங்கே தான் காண முடியும். தினமும் அய்யனுக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தத்தை கோவில் காளைகள் மலையேறி கொண்டு செல்கின்றன. இந்த அதிசயம் வேறெங்கும் இல்லை. அபிஷேகத்திற்கு நீர் எடுக்கப்படும் இத்தீர்த்தம் மாமாங்கத் தீர்த்தமாகும். மலை கோவிலுக்கு தென்புறம் அமைந்திருக்கும் தீர்த்த விநாயகரின் முன் பொங்கி பிரவாகம் எடுத்த தீர்த்தமாகும் இது. அதுமட்டுமின்றி கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இடமும் இதுவே. அக்னி ஜாதி மூர்த்தி எனும் இரு சிரசுடன் முருகன் காட்சி தரும் இத்தரிசனம் வேறு எங்கும் பார்ப்பது அரிதே.
Image : RVA Temples