அகத்தியர் கமண்டலத்திலிருந்து காவேரி உருவான அதிசய திருத்தலம், கொடுமுடி!
By : Kanaga Thooriga
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சிவ ஸ்தலங்களுள் ஒன்று கொடுமுடி மகுடீஸ்வரர் கோவில். கொங்கு நாட்டு ஸ்தலங்களில் தேவாரம் பாடப்பெற்ற கோவில்களுள் இது ஆறாம் கோவிலாகும். காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவிலுடன் அகஸ்திய முனிவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் ஈரோட்டில் இருந்து 25 கி.மீ தூரத்திலும், கரூரிலிருந்து 25 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோவிலில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா மூவருமே அமைந்துள்ளனர். அதனாலேயே இக்கோவிலுக்கு திருமூர்த்தி கோவில் என்று பெயர். பரந்து விரிந்த இந்த பிரமாண்ட ஆலயத்திற்கு மூன்று வாசல்கள் உண்டு.
வடக்கு வாசல் கொடுமுடி நாதர் மற்றும் மகுடீஸ்வரர் எனும் சிவன் சந்நிதியின் நுழைவு வாயிலாகவும் தெற்கு வாயிலில் அம்பிகை பன்மொழி நாயகி மற்றும் செளந்தராம்பிகை என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலின் மற்றொரு ஆச்சர்யம் யாதெனில் இங்கிருக்கும் நடராஜரின் இடது பாதம் வழக்கத்திற்கு மாறாக தரையில் இருக்கும். அதாவது நடராஜரின் இரு பாதங்களும் தரையில் இருப்பதை போன்ற தோற்றம் கொண்ட அதிசய ஸ்தலம் என்பதாலேயே இங்கிருக்கும் நடராஜரை குஞ்சிதபாத நடராஜர் என அழைக்கின்றனர்.
ஒருமுறை ஆதிஷேசனுக்கும் வாயுவுக்கும் யார் பலசாலி என்ற போட்டி நிலவியது. அதன் பொருட்டு நிகழ்ந்த பந்தயத்தில் ஆதிஷேசனின் தலையிலிருந்து ஐந்து ரத்தினங்கள் ஒவ்வொரு இடத்தில் விழுந்து லிங்கமாக மாறியது என்பது நம்பிக்கை. திருவண்ணாமலையில் சிகப்பு ரத்தினம் திருவண்ணாமலையிலும், மரகதம் திருஈங்கோய் மலையிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும், நீலமணி பொதிய மலையிலும் வைரமணி பாண்டிக்கொடிமுடியிலும் விழுந்ததாக ஐதீகம். அதன்படியே இங்குள்ள சிவபெருமான் வைரத்தால் ஆனவர் என்பது நம்பிக்கை.
பாண்டிய மன்னர்கள் இக்கோவிலை பரமாரித்து புணரமைத்து நெருங்கிய தொடர்புடன் இருந்ததாலேயே இத்தலத்திற்கு திருப்பாண்டி கொடிமுடி என்ற பெயரும் உண்டு. அதுமட்டுமின்றி கைலாயத்திலிருந்து சமநிலையை ஏற்படுத்த தெற்கு நோக்கி வந்த அகஸ்தியர் இங்கிருக்கும் விவசாயிகளின் வறுமையை போக்க காவேரியை தன் கமண்டலத்திலிருந்து உருவாக்கிய இடம் இதுவே. எனவே தான் இங்கிருக்கும் விநாயகருக்கு காவேரி கண்ட விநாயகர் என்று பெயர்.
இது நாகஸ்தலம் என்பதால் இங்கே நாக தோஷம் இருப்பவர்கள் வணங்குவது நல்ல பலனை தரும் என சொல்லப்படுகிறது.