அகஸ்தியருக்கு உபதேசம் நிகழ்ந்த அதிசய திருத்தலம் மருந்தீஸ்வரர் ஆலயம் !
By : Kanaga Thooriga
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது மருந்தீஸ்வரர் ஆலயம். சிவபெருமானுக்கென்று அர்பணிக்கப்பட்ட தலமாகும். சைவத்திருத்தலங்களில் முக்கியமானதும் கூட. சிவபெருமானி தேவாரம் பாடப்பெற்ற 275 தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் நவகிரஹம் இல்லை. மேலும் நாயன்மார்களில் இருவரான அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர் இந்த கோவிலை புகழ்ந்து பாடியுள்ளனர்.
இந்த கோவில் சோழ மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. நோய்கள் தீர்ந்து பிணியிலிருந்து விடுபட பக்தர்கள் குவியும் முக்கிய இடம் இந்த மருந்தீஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் ஆறு கால பூஜை செய்யப்படுகிறது.
இந்த திருத்தலத்தில் தான் தீரா பிணிகளை தீர்த்து வைக்கும் மருத்து முறைகள் மற்றும் மூலிகைகள் மற்ற சிகிச்சை குறிப்புகள் குறித்த உபதேசத்தை சிவபெருமான் அகஸ்திய முனிக்கு வழங்கினார். எனவே தான் இங்கிருக்கும் பெருமானுக்கு மருந்தீஸ்வரர் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ராமாயணத்தை எழுதிய வால்மீகி அவர்கள் தன் தவறான செயல்களில் திருந்தி சிவனை தரிசித்தது இங்கு தான். இந்த இடத்தில் வால்மீகி ஆசிர்வதிக்கப்பட்டதாலேயே இந்த இடத்திற்கு திருவால்மிகியூர் என்று பெயர் வந்தது. இது பின்னொரு காலத்தில் திருவான்மிகியூர் என்றும் அதுவே மருவி திருவான்மியூர் என்றும் ஆனது. இவருடைய புகழை பரைசாற்றும் விதமாய் திருவான்மியூரில் வால்மீகி நகர் எனும் பகுதியும் உண்டு. அங்கு மேற்கு புறமாக இவருக்கென தனி ஆலயமும் உண்டு.
இந்த கோவிலின் சிறப்பம்சங்கள் சொல்லில் அடங்காதது. இந்திரனின் சாபத்தை போக்கிய லிங்கத்தை அனுமர் வழிபட்டதும் இங்கே தான். மேலும் இங்குள்ள லிங்கத்திற்கு முனிவர் பரத்வாஜர் அவர்கள் பூஜைகள் செய்துள்ளார். புராணங்களின் படி, பிரம்ம தேவர் இங்கு சிவபெருமானுக்கு திருவிழா நட த்தியுள்ளார்.
சுவாரஸ்யமாக இங்கிருக்கும் மூலவருக்கு பால்வண்ணநாதர் என்ற பெயரும் உண்டு. ஒரு முறை வசிஸ்டர் செய்த சிவபூஜைக்காக இந்திரன் காமதேனுவை அனுப்பி வைத்தார். காமதேனு பூஜை நேரத்தில் பால் வழங்காமல் போகவே கோபமுற்ற முனிவர் காமதேனுவை சபித்து விட்டார். தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விடுதலை பெறுவதற்காக காமதேனு தினசரி வன்னி மரத்தின் அடியில் சுயம்புவாக தோன்றிய வழிபட்டது. அதன் படியே தினசரி சிவலிங்கத்தின் பால் சுரந்து தன் பக்தியை செலுத்தி சாப விமோசனம் பெற்றது. எனவே இந்த பெருமானுக்கு இந்த பெயர் வந்தது.
மருந்தீஸ்வரர் ஆலயத்தில் இருந்து தொடங்கும் சாலையே இன்று பிரசித்தி பெற்ற கிழக்கு கடற்கரை சாலை ஆகும். இது சாம்ராஜ்யத்திலிருந்து, தஞ்சை மற்றும் ஆந்திரா போன்ற பல இடங்களை இணைத்ததால் சோழர்களின் காலத்திலும் வடகபெருவழி என்று புகழோடு அழைக்கப்பட்டது
Image : Dinamalar