பக்தர்களின் குறையை கேட்டு நீதி வழங்கும் அதிசய மாசாணியம்மன்
By : G Pradeep
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 24 கி.மி. தொலைவில் ஆனைமலை ஆழியாற்றங்கரையில் அமைந்துள்ளது மாசாணி அம்மன் கோயில் . எந்த அம்மன் கோயில்களிலும் இல்லாத அதிசயமாக 17 அடி நீளத்தில் பிரம்மாண்ட தோற்றத்துடன் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் மாசாணியம்மன்.
அம்மனின் காலடியில் அசுரன் ஒருவன் காட்சி அளிக்கிறான். மகுடா அரன் என்று அவனை அழைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தினம் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசிக்கிறார்கள். அமாவசை பெளர்ணமி ஆடி வெள்ளி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது . இந்த தாய் நீதி தேவதையாக போற்றப்படுகிறார். நம்பிக்கை துரோகம், வீண் பழி , ஏமாற்றம் போன்ற பக்தர்கள் படும் துயரங்களுக்கு தீர்வளிக்கிறாள் .
இதற்காகவே இந்த கோயில் மகா மண்டபத்தில் நீதிக் கல் எனும் கல்லை வைத்திருக்கிறார்கள். இங்கு மிளகாய் அரைத்து பூசினால் தாமதிக்காமல் நீதி கிடைக்கிறது. ஒரு தேங்காய் இரண்டு வாழைப்பழம் நூறு கிராம் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இங்குள்ள ஆட்டுக்கல்லில் அறைக்கிறார்கள் பிறகு அதை கோயிலில் உள்ள நீதிக்கல்லில் பூசி நீதி வேண்டுகிறார்கள். எந்த அம்மன் கோயிலிலும் இல்லாத வழிபாடு இது .
பக்தர்கள் பிரார்த்தனை பலித்த உடன் 90 நாட்கள் கழித்து அம்மனுக்கு எண்ணை காப்பு செலுத்தி நன்றி கூறுகிறார்கள் . மயான சயனி அம்மன் என்னும் பெயரே மசாணி அம்மன் என்று மருவியது . இக்கோயிலின் வரலாறு நிஜமான ஒரு மெய்சிலிர்க்கும் வரலாறாகும் . குறுந்தொகையின் 292 ஆவது பாடலான " மண்ணிய சென்ற ஒன்னுதல் அரிவை . புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு. ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள். நின்ற பொண் செய் பாவை கொடுக்கவும் கொள்ளான். பெண் கொலை புரிந்த நன்னன் போல .... என்ற பாடல் மாசாணி அம்மன் வரலாற்றை சொல்கிறது .
சங்ககாலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனின் காவல் மரத்திலிருந்து விழுந்து ஆற்றில் மிதந்து வந்த மாம்பழத்தை உண்ட குற்றத்திற்காக இளம் பெண் ஒருத்திக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . அவள் தந்தையும் இனத்தாரும் அப்பெண்ணின் எடைக்கு எடை தங்கமும் 82 யானைகளும் தருவதாக கூறியும் மன்னன் கேடக்காமல் அப்பெண்ணின் தலையை துண்டித்து உடலை மட்டும் தற்போது கோயில் உள்ள இடத்தில் மக்கள் பார்க்க கிடைத்தி வைத்தான். கோபம் கொண்ட மக்கள் அம்மன்னனுக்கு எதிராக எழுந்து அவனை விரட்டி காவல் மரத்தையும் வெட்டி விடுகிறார்கள் . பிறகு அந்த பெண்னை அடக்கம் செய்து வழிபட ஆரம்பித்தார்கள். தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் சக்தி மிக்க தலமாக இத்தலம் விளங்குகிறது.