ஆயிரம் படிகளை கடந்தால் மட்டுமே தரிசிக்க முடியும் ஆச்சர்ய சக்திபீடம் !
By : Kanaga Thooriga
மத்தியபிரதேசத்தின் திரிகூடா மலையில் உள்ள மைஹர் எனும் பகுதியில் அமைந்துள்ளது மா சாரதா தேவி ஆலயம். அன்னையின் 51 சக்தி பீடங்களுள் மிக முக்கியமான தலமாக இது கருதப்படுகிறது. அன்னையின் மார்பு பகுதி விழுந்த இடம் இதுவாகும். இந்த கோவிலை தற்சமயம் அடைய வேண்டுமெனில், ஒருவர் 1063 படிகட்டுகளை ஏறி தரிசிக்க வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த இடத்தை அடைவதற்கு ரோப்கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், அல்ஹா மற்றும் உத்தால் எனும் இரு வீரர்கள் பிர்த்வி ராஜ் சவுஹன் என்பவருடன் போர் புரிந்தனர். இந்த இருவரும் சாரதா தேவியின் தீவிர பக்தர்கள். இன்று கோவிலிருக்கும் இடம் ஒரு காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த போது இந்த இருவர் தான் முதன் முதலில் அன்னையை தரிசித்தார்களாம். அவர்கள் அன்னையை சாரதா மாய் என்று அழைக்கவே இந்த அம்பிகைக்கு மா சாரதா மாய் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லுகின்றனர். அல்ஹா என்பவர் இங்குள்ள சாரதா தேவியை 12 ஆண்டுகள் வணங்கி முக்தி பெற்றார். கோவிலுக்கு பின்புறம் இருக்கும் குளம் இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த குளத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் ஒரு குத்துசண்டையிடும் மைதானமும் உள்ளது.
இங்கு உள்ளூரிலுள்ள மக்களின் நம்பிக்கையின் படி, அல்ஹா என்பவர் இன்றும் உயிரோடிருக்கிறார் மற்றும் தினசரி அதிகாலை 4 மணியளவில் இங்கு வந்து தரிசிக்கிறார் என சொல்லப்படுகிறது. நவராத்திரி மற்றும் அஷ்டமி ஆகிய நாட்கள் மிகவும் விஷேசத்திற்குரிய நாட்களாகும்.
இக்கோவில் வளாகத்தினுள் கெளரி சங்கர், துர்கையம்மன் மற்றும் பிரம்மதேவி ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உண்டு.
இங்குள்ள அம்பிகையை சாரதா தேவி என்றும் சரஸ்வதி தேவி என்றும் அழைக்கின்றனர். பிள்ளை பேறு கல்வி ஆகியவற்றை அருளும் அன்னையாக அம்பிகை இருக்கிறாள். இங்குள்ள சாரதா தேவியின் திருவிக்ரகம் மிகவும் பழமையானது ஆகும் இந்த சிற்பத்தை கி.பி 502 ஆம் ஆண்டில் நூபுலதேவா என்பவர் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.
Image : Patrika