அதிசய மூலிகை, சித்தர்களின் வசிப்பிடம் என பல அதிசயங்கள் நிறைந்த சதுரகிரி!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில்
By : Kanaga Thooriga
மதுரைக்கு அருகே விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சதுரகிரி. சதுரகிரி என்றாலே பெரும்பாலும் அங்கிருக்கும் சுந்தர மகாலிங்கர் ஆலயத்தை குறிப்பதாகவே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இந்த மலை திகழ்கிறது. இந்த மலைக்கு தினசரி சென்று பக்தர்கள் வழிபாடு செய்ய இயலாது. இந்த மலையில் இருக்கும் கோவிலை தரிசிக்க பக்தர்கள் இரு நாட்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அது அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகும் மற்றும் பிரதோஷ நாட்களிலும் அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 4 மணி ஆகும்.
இந்த மலைக்கான பெயர் காரணம், சதுர் என்றால் நான்கு என்று பொருள் நான்கு மலைகள் ஒன்றிணைந்தது போன்ற வடிவம் இருப்பதால் சதுரகிரி என ஒரு சாரரும், இந்த மலை சதுரமான வடிவில் அமைந்திருப்பதால் சதுரகிரி என அழைக்கபடுகிறது என மற்றொரு சாரரும் கூறுகின்றனர்.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், கைலாயத்தில் சிவன் பார்வத் திருமணம் நடக்கையில் தென் திசையை சமன் செய்ய வந்த அகத்திய முனி, இங்கு சதுரகிரியில் வழிபாடு செய்தார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் உருவாக்கிய லிங்கமே சுந்தர மகாலிங்க லிங்கம். அகத்தியர் அமர்ந்த மலையை கும்ப மலை என்று அழைக்கின்றனர் உள்ளூர் வாசிகள். மேலும் இந்த லிங்கத்தை தினமும் இரவில் சித்தர்கள் வழிபடுகின்றனர் என்கின்ற ஐதீகமும் உண்டு.
இந்த கோவிலுக்கு மலையேற்றம் என்பது வெகு பிரசித்தம். வெளிநாடுகளிலிருந்து கூட மக்கள் இங்கு வந்து மலையேறி சிவனை வழிபடுவதை காண முடியும். ஆனால் இந்த மலையை அத்தனை எளிதில் ஏறிவிட முடியாது என்பதும் உண்மை. மிகவும் கடினமான மலை, சிவனே மலையாக இருக்கின்றான் என்ற ஐதீகத்தால் இந்த மலையை யாரும் காலணி அணிந்து ஏறுவதில்லை.
இந்த கோவில் மூலிகைகளுக்கு வெகு பிரசித்தம். தீரா நோயகளையும் தீர்க்கும் அபூர்வ முலிகைகள் இங்கே இருக்கின்றன என சொல்லப்படுகிறது. அதற்கு உதாரணமாக இங்கு கிடைக்கும் ஜோதி புல் என்ற புல்லை பகலில் நீரில் நனைத்து வைத்து விட்டு இரவில் சென்று பார்த்தால் ஏற்றி வைத்த விளக்கை போல பிரகாசிக்கும் அதிசயத்தை காண முடியுமாம். ஆதி காலத்தில் வெளிச்சத்திற்காக இந்த ஜோதி புல்லை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இக்கோவில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் அம்பாளுக்கு ஆனந்தவல்லி என்பது திருப்பெயர்.