தலைமுடி சூடி பக்தரை காத்த அதிசய செளரிராஜ பெருமாள் ஆலயம்
By : Kanaga Thooriga
செளரிராஜ பெருமாள் கோவில் தமிழகத்தில் நாகபட்டிணம் மாவட்டத்தில் திருக்கண்ணப்புரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக இக்கோவில் கருதப்படுகிறது. இங்கிருக்கும் பெருமாளுக்கு நீல மேக பெருமாள் என்கிற மற்றொரு திருப்பெயரும் உண்டு.
இங்கிருக்கும் அருள் புரியும் இலட்சுமி தேவிக்கு திருகண்ணபுர நாயகி என்ற் பெயர். இக்கோவில் 7 அடுக்கு கோபுர அமைப்பை கொண்டுள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கை நிலவுகிறது, பிற்காலத்தில் தஞ்சை நாயக்கர்களால் புணரமைக்கபட்டது. வைகாசியில் இங்கு நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவிலின் தல வரலாறு யாதெனில், ஒரு முறை இங்கே பெருமாளுக்கு சேவகம் செய்து வந்த அர்ச்சகர் பெருமாளின் தீவிர பக்தராவார். ரங்கபட்டா என்பது அவரது பெயர். எப்போது திருமாலுக்கு மாலையை சாற்றுவது வழக்கம். அதுமட்டுமின்றி கோவிலுக்கு அரச குடும்பத்தை சேர்ந்த யாரேனும் வந்தால் அவர்களுக்கும் மாலையை சாற்றுவது வழக்கம். ஒரு முறை அரசர் கோவிலுக்கு வரவே, அவருக்கு மரியாதை செய்ய வேறு எந்த மாலையும் இல்லாததால் பெருமாளுக்கு சாற்றிய மாலையையே சாற்றினார். அப்போது அந்த மாலையில் தலை முடி இருப்பதை கண்டார் அரசர். அதை கண்டு சினமுற்று இது என்ன தலை முடி என்று வினவினார். அதற்கு அந்த அர்ச்சகர், இதைக்குறித்து தான் ஒன்றும் அறியேன், பெருமாளுக்கு சாற்றிய மாலை தான் அது. அதில் தலை முடி இருப்பின், அது பெருமாள் உடையதே என்று கூறினார். அதற்கு அரசர் தான் நாளை வருவதாகவும், அப்போது பெருமாளின் திருமுடியை தான் காண வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவருக்கு மரண தண்டை நேரும் என்றும் சொல்லி சென்றார். தன்னை தண்டனையிலிருந்து காக்க பெருமாளிடம் அந்த அர்ச்சகர் வேண்டவே மறுநாள் அரசருக்கு செளரி அதாவது திரு முடி சூடி காட்சி தந்தார். எனவே தான் பெருமாளுக்கு செளரிராஜ பெருமாள் என்று பெயர்.
இந்த திருமுடி கோலத்தை உற்சவ மூர்த்தியிடமே நாம் காண முடியும்.