திருடுவதை சடங்காக கொண்டிருக்கும் விநோத கோவில், சூடாமணிதேவி ஆலயம்!
By : G Pradeep
இந்தியாவில் இப்படியொரு விநோத பழக்கத்தை நாம் பெரும்பாலும் கேட்டிருக்க முடியாது. சூடாமணி தேவி கோவில் எனும் இந்த திருத்தலத்தில் பக்தர்கள் திருடுமாறு அறிவுருத்தப்படுகிறார்கள். இந்த வேண்டுதலை நிறைவேற்ற அந்த பகுதியை சுற்றியிருக்கும் மக்கள் இங்கே குவிகிறார்கள்.
திருடுவது என்பது தவறு தான், ஆனால் அது எந்த சூழலில் எந்த நோக்கத்தில் ஒரு செயல் நிகழ்கிறது என்பதை பொருத்தே அமைகிறது.
உத்தர்கண்ட் மாநிலத்தில் ரூர்கி எனும் மாவட்டத்தில் சுடிலா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். பிள்ளையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் தரும் அற்புத தலமாக இந்த இடம் உள்ளது. இந்த கோவில் பார்வதி தேவியின் அருளால் நிரம்பியுள்ளது. குழந்தையில்லாத தம்பதியினர் இந்த கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
அதில் ஒரு வழிபாட்டு முறை தான் தேவியின் காலடியில் இருக்கும் மரத்தாலான பொம்மையை திருடிச் செல்வது. சூடாமணி தேவியின் திருப்பாதத்தில் இருக்கும் பொம்மையை திருடுவது என்பது ஒரு சடங்கு இந்த சடங்கினை செய்ப்வர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கிறது என்பது இந்த ஊர் மக்களின் பரிபூரண நம்பிக்கை.
அதுமட்டுமல்ல, இந்த கோவிலில் வேண்டி, மர பொம்மையை திருடி பிள்ளை வரம் கிடைக்கப்பெற்ற பின், அவர்கள் அந்த கோவிலுக்கு மீண்டும் வருகை தந்து, திருடிய பொம்மையை அம்மனின் திருப்பாதத்தில் சமர்பிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் திருடிய பொம்மையோடு சேர்த்து, மற்றொரு புதிய பொம்மையையும் அவர்கள் வைக்க வேண்டும். இது பிறந்த புதுக்குழந்தையின் சார்ப்பாக வைக்கப்படுவது.
இந்த நம்பிக்கை இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல. காலம் காலமாக, வரலாற்று ரீதியாக சொன்னால், லந்துரான் சாம்ராஜ்ஜிய காலகட்டத்திலிருந்தே அதாவது 1800 ஆம் ஆண்டு முதலே இந்த வழக்கம் இருந்து வந்துள்ளது. அரசன் லந்துரானுக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்தது அவன் சூடாமணி தேவியை வேண்டிய போது அவன் முன் தோன்றினார்.
தனக்கு குழந்தை வரம் வேண்டுமென கேட்டதும் அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டார் சூடாமணி தேவி. ஒரு சிறிய பொம்மை மட்டும் அங்கே இருந்தது அதை வீட்டிற்கு கொண்டு வந்து வணங்கி வழிபட்ட போது அவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்தது. இதற்கான நன்றியாக மற்றொரு புதிய பொம்மையை செய்து அதனையும் சேர்த்தே இறைவியின் பாதத்தில் சமர்பித்தான் அரசன் என வரலாற்று கதை சொல்லப்படுகிறது. அன்று துவங்கி இன்று வரை இந்து வழக்கம் நீள்கிறது.